"கொங்கை யென்று வீறு மருப்பிணை" என்பதற்கு - கொங்கையாகிய யானைத்தந்த மென்றும், "கண்ணென்று வீறுமருப்பிணை" என்பதற்கு - கண் பார்வையாகிய பெண்மான் பார்வை யென்றும் உருவகமாகக் கருத்துக் கொள்க; அன்றி, கொங்கைபோன்று யானைத் தந்தமும், கண்போன்று பெண்மான்விழியும் பொருந்திய என, எதிர்நிலையுவமையாகக் கருத்துக் கொள்ளினுமாம். கிளி - அதன்சொல்லுக்கும், பிணை - அதன் நோக்கத்துக் கும் முதலாகுபெயர். மரு - மருவு என்பதன் விகாரம். பிணை - பெண்மைப் பெயர். துளவம் - துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. திருத்துழாய் மலர் மாலை, திருமாலுக்கு உரியது. துளவமலர்க்கண்ணி - துளவினாலும் மலர் களினாலுமாகிய மாலையுமாம். "தமக்கு" என்பதை மத்திமதீபமாக "தொண்டாய்" என்பதனோடுங் கூட்டுக. உள = உள்ள: தொகுத்தல். ந + மலம் + அர் - அமலர்; பரிசுத்தர்; வடமொழிச்சந்தி. அண்ணியார் - அண்என்னும் வினைப் பகுதியினடியாப் பிறந்த இறந்தகாலவினையாலணையும்பெயர்: "இன்" என்ற இடைநிலை ஈறுதொக்கது. அன்போடு தமக்குத் தொண்டுபூண்ட தூயோரது உள்ளத்தில் உவந்து வந்தெழுந்தருளி யிருத்தலுமன்றி, அவர்கட்குக் கட்புலனாய் அருகில் தோன்றி நின்று ஆவனசெய்தலு முடையரென்பது, "தொண்டாய்த் தமக்கன்புள வமலர்க் கண்ணியார்" என்பதன் கருத்து. (42) | 63. | மாதரம்பொன் மேனி வடிவு மவர்குறங்கு | | மீதரம்பை யைப்பழிக்கும் வேங்கடமே - பூதமைந்தின் | | பம்பரமா காயத்தார் பாடினால் வீடருளு | | நம்பரமா காயத்தார் நாடு. | (இ - ள்.) மாதர் - மகளிரது, அம் பொன் மேனி வடிவும் - அழகிய பொன்னிறமான உடம்பின் தோற்றமும், மீது அரம்பையை பழிக்கும் - மேலுலகத்திலுள்ள ரம்பை யென்னுந் தேவமாதை இழிவு படுத்தப்பெற்ற: அவர் குறங்கும் - அம்மகளிரது தொடையும், மீது அரம்பையை பழிக்கும் - மேன்மையுள்ள (செழித்த) வாழைத்தண்டை வெல்லப்பெற்ற: வேங்கடமே -,- பூதம் ஐந்தின் - பஞ்சபூதங்களினாலாகிய, பம்பரம் - சுழல்கிற பம்பரம் போல விரைவில் நிலைமாறுவதான, மா காயத்தார் - பெரிய உடம்பையுடைய சனங்கள், பாடினால் - துதித்தால், வீடு அருளும் - (அவர்கட்கு) முத்தியை அளிக்கின்ற, நம் பரம ஆகாயத்தார் - நமது தலைவரும் பரமாகாசமெனப்படுகின்ற பரமபதத்தை யுடையவருமான திருமாலினது, நாடு - ஊர்; (எ - று.) திருவேங்கடமலையில் வாழும் மகளிர் அரம்பை யென்னும் தேவமாதினும் மேம்பட்ட வடிவழகையும், வாழைமரத்தண்டினும் அழகிதாகத்திரண்டு உருண்டு நெய்ப்பமைந்த தொடையையும் உடைய ரென்றவாறு. மாதர் - விரும்பப்படும் அழகுடையோர். அரம்பை யென்பது - இருபொருளிலும் ரம்பா என்ற வடசொல்லின் விகாரம். பழிக்கும் என்பது - உவமையுருபுமாம். பூதம் ஐந்து - நிலம், நீர், தீ, காற்று, வானம். காயம், பரமாகாசம் - வடசொற்கள். மாகாயம் - ஸ்தூலசரீரம். வீடு - (பற்றுக்களை) விட்டு |