அடையு மிடம்; இச்சொல் - "முக்தி" என்னும் வடசொல்லின் பொருள் கொண்டது. பரமாகாசம் - சிறந்த வெளியிடம். (63) | 64. | கோள்கரவு கற்றவிழிக் கோதையர்கள் பொற்றாளும் | | வேள்கரமு மம்பஞ்சார் வேங்கடமே - நீள்கரனார் | | தூடணனார் முத்தலையார் துஞ்சவெய்து துஞ்சாரைக் | | கூடணனார் முத்தலையார் குன்று. | (இ - ள்.) ) கோள் - (ஆடவரை) வருத்துந்தன்மையையும், கரவு - (அவர்கள் மனத்தை) வஞ்சனையாகக் கவருந் தன்மையையும், கற்ற - பயின்ற, விழி - கண்களையுடைய, கோதையர்கள் - மகளிரது, பொன் தாளும் - அழகியபாதமும், அம் பஞ்சு ஆர் - அழகிய செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற: வேள்கரமும் - மன்மதனது கையும், அம்பு அஞ்சு ஆர் - பஞ்சபாணங்கள் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- நீள் - பெரிய, கரனார் - கரனும், தூடணனார் - தூஷணனும், முத்தலையார் - திரிசிரசும், துஞ்ச - இறக்கும்படி, எய்து - அம்பு செலுத்தி, துஞ்சாரை கூடு - உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த, அணனார் - தமையனாராகவுள்ளவரும், முத்து அலையார் - முத்துக்களையுடைய கடலிற்பள்ளிகொள்ளுகின்ற வருமானதிருமாலினது, குன்று - மலை; (எ - று.) கோள் கரவு - உம்மைத்தொகை. கரவு - காத்தல்; தொழிற்பெயர். கோதையர் - மாலைபோல் மென்மையான தன்மையுடையார்; கோதை - மாலை; கள் - விகுதிமேல்விகுதி. கரம் - வடசொல். "கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம்," "யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்லநகும்" என்றபடி காதலன் தன்னைநோக்கும்பொழுது தான் எதிர்நோக்காது நாணித் தலைவணங்கி நிலத்தை நோக்கியும், அவன் தன்னை நோக்காத பொழுது தான் அவனை உற்றுநோக்கியும் வருகிற விழி யென்பார், "கரவு கற்ற விழி" என்றார். அதற்குக் கோள் கற்றலாவது - காதற்குறிப்பை வெளிப்படுத்துகின்ற நோக்கினாலும், பொதுநோக்கின் அழகினாலும் ஆடவர்க்கு வேட்கை நோயை விளைத்தல். வடிவின்பருமையோடு தொழிலின்மிகுதியும் உடைமை தோன்ற, "நீள்கரன்" என்றார். கரனார், தூடணனார், முத்தலையார் என்ற உயர்வுப்பன்மைகள், அவர்களுடைய வலிமைத்திறத்தை விளக்கும். கரனென்ற வடசொல் - கொடியவனென்றும், தூஷண னென்ற வடசொல் - எப்பொழுதும் பிறரைத் தூஷிப்பவ னென்றும் பொருள்படும். முத்தலையார் - மூன்று தலைகளை யுடையவனென்று பொருள்படும்; த்ரிசிரஸ் என்ற வடசொல்லின் பொருள் கொண்டது. கரன் - இராவணனுக்குத் தாய்வழி யுறவில் தம்பிமுறையில் நிற்கின்ற ஓர் அரக்கன்; தண்டகாரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறித்த ஜநஸ்தாந மென்னு மிடத்தில் அவட்குப் பாதுகாவலாக இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர்சேனைக்கு முதல் தலைவன். இலக்குமணனால் மூக்கறுக்கப்பட்டவுடனே இராமலக்குமணரிடம் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை, கரன்காலில் விழுந்துமுறையிட, அது |