யுடையதெனத் தமிழ்வகையாற் காரணப்பொருள்கூறுதல். பொருந்தாது, வடசொல்லாதலின். வேங்கை - ஓர்மரமும், புலியும். வேங்கடமலையிலுள்ள யானைகள் புலிகட்கு அஞ்சியோடாது எதிர்நின்று பொருது அவற்றை அழிப்பனவென அவற்றின்கொழுமையை விளக்கியவாறு. அரித்தல் - ஹரித்தல். தவளம் - வடசொல். துரியோதனன் சொன்னபடி துச்சாதனன் திரௌபதியைச் சபையிற் கொணர்ந்து துகிலுரியத் தொடங்கியபோது அவள் கைகளால் தனது ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே எம்பெருமானைக் கூவியழைத்தபொழுது, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்து நின்று பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில் ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பி வணங்கித் துதித்த வுடனே எம்பெருமான் அவளுடைய ஆடை மேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னாதலால், "மேகலைவிட் டங்கை தலைவைத்தவ ளச் சங்கெடுத்தார்" என்றார். எம்பெருமானைச் சரணமடைவார்க்கு ஸ்வாதந்தி ரியம் சிறிதும் இருக்கக்கூடாதென்பதும், தன் முயற்சி உள்ளவளவும் பெருமான் கருணைபுரியா னென்பதும், இங்கு விளங்கும். மேகலை - எட்டுக் கோவை இடையணியுமாம். (65) | 66. | மாவிற் குயிலு மயிலு மொளிசெய்ய | | மேவிப் புயறவழும் வேங்கடமே - யாவிக்கு | | ளானவரு டந்தடுத்தா ரானிரைக்காக் குன்றேந்தி | | வானவரு டந்தடுத்தார் வாழ்வு. | (இ - ள்.) மாவில் - மாமரத்தில், குயிலும் - குயில்களும், ஒளி செய்ய - ஒளித்துக் கொள்ளும்படியும்: (அங்கு), மயிலும் - மயில்களும், ஒளி செய்ய - பிரகாசமடையும்படியும்: மேவி - பொருந்தி, புயல் - மேகம், தவழும் - சஞ்சரிக்கப்பெற்ற, வேங்கடமே -,- ஆன அருள் தந்து - பொருந்தின கருணையைச் செய்து, ஆவிக்குள் அடுத்தார் - (எனது) உயிரினுள் சேர்ந்தவரும், ஆன் நிரைக்கு ஆ - பசுக்கூட்டங்களைக் காக்கும்பொருட்டு, குன்று ஏந்தி - (கோவர்த்தன) கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து, வான வருடம் தடுத்தார் - மேகங்களின் மழையை (ஆநிரையின் மேலும் ஆயர்களின் மேலும் விழாமல்) தடுத்தவருமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) வசந்தகாலத்திற் களிப்புக்கொண்டு இனிதாகக் கூவி விளங்குந்தன்மை யனவான குயில்கள் மேகங்களின் வருகையைக் கண்டு கொண்டாட்ட மொழிந்து வருந்திப் பதுங்குதலும், மயில்கள் மேகங்களின் வருகையைக் கண்டவுடனே மகிழ்ச்சியடைந்து கூத்தாடிக்கொண்டு விளங்குதலும் இயல்பாதலால், "குயிலும் மயிலும் ஒளிசெய்யப் புயல் மேவித்தவழும்" என்றார். ஒன்றுக்குஒன்று எதிரான தன்மையுடைய குயிலும் மயிலும் புயல்வருகையில் ஒருநிகரான தன்மையை அடைகின்றன வென்று "ஒளிசெய்ய" என்ற சொல்லின் ஒற்றுமையாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு. "மாவில்" என்றதனால், இவ்விரண்டுக்கும் மாமரம் தங்குமிடமாதல் அறிக. ஒளி - மறை |