தலும், விளக்கமும்: முந்தினபொருளில் முதனிலைத் தொழிற்பெயர். பிந்தின பொருளில் பண்பு உணர்த்தும் பெயர். செய்ய என்ற வினையெச்சம் - இங்குக் காரியப்பொருளதாதலால், எதிர்காலம். ஆவிக்குள் - எல்லாவுயிர் களினுள்ளும் என்றுமாம்; என்றது, அந்தரியாமித்துவங் கூறியவாறாம். ஆவி - மனமுமாம். வான் என்ற ஆகாயத்தின் பெயர் - இடவாகுபெயராய், மேகத்தைக் குறிக்கும்; அம் - சாரியை. வருடம் - வர்ஷமென்ற வடசொல் லின் விகாரம். (66) | 67. | கானோடருவி கனகமுமுத் துந்தள்ளி | | மீனோ வெனக்கொழிக்கும் வேங்கடமே - வானோர்கண் | | மேகனய னங்கொண்டார் வேணியரன் காண்பரியார் | | காகனய னங்கொண்டார் காப்பு. | (இ - ள்.) கான் ஓடு அருவி - காடுகளின்வழியாக ஓடிவருகின்ற நீர்ப் பெருக்குக்கள், கனகமும் முத்தும் தள்ளி - பொன்னையும் முத்தையும் அலைத்தெறிந்து, மீனோ என கொழிக்கும் - நக்ஷத்திரங்களோவென்று (காண்கின்றவர்கள்) சொல்லும்படி (பக்கங்களில்) ஒதுக்கப்பெற்ற: (அவ்வருவிகள்), மீ நோவு எனக்கு ஒழிக்கும் - மிகுதியான (பிறவித்) துன்பத்தை எனக்குப்போக்குதற்கு இடமான: வேங்கடமே -,- வானோர்கள் - மேலுலகில் வசிப்பவர்களான தேவர்களும், மேகன் - மேகத்தை வாகனமாகவுடையவனான இந்திரனும், அயன் - பிரமனும், அம் கொண்டு ஆர் வேணி அரன் - நீரை (கங்கா நதியின் வெள்ளத்தைத்) தரித்துப் பொருந்திய (கபர்த்தமென்னும்) சடை முடியையுடைய சிவபிரானும், காண்பு அரியார் - காணவொண்ணாதவரும், காகன் நயனம்கொண்டார் - காகாசுரனுடைய கண்ணைப் பறித்தவருமான திருமால், காப்பு - (எழுந்தருளிநின்று உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ - று.) மீன் ஓ என கொழிக்கும் என்பதற்கு - மீன்கள் ஓவென்று அலறித்துள் ளும்படி கொழிக்குமென்று உரைப்பாரு முளர். மலையருவிகள் அங்கு உண்டாகிற பொன்னையும் முத்துக்களையும் தள்ளிக் கொழித்து வருதல் இயல்பு. கான் - காநக மென்ற வடசொல்லின் விகாரம். கநகம் - வடசொல். திரு வேங்கடமலையி லுள்ள அருவிகளின் வடிவமான பாபவிநாசம் ஆகாசகங்கை முதலிய புண்ணியதீர்த்தங்கள் தம்மிடம் நீராடுகின்றவர்களுடைய பிறவித் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல மகிமையுடையன வாதலால், "அருவி மீநோவு எனக்கு ஒழிக்கும்" என்றார். பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமையால், சிலேடை யமகம் திரிபு இவற்றில் நகரனகரங்களை அபேதமாகக் கொண்டு அமைத்தல் மரபாதல்பற்றி, "மீனோவென்" எனப்பட்டது. மேகம், அஜன், வேணீ, ஹரன்காகன், நயநம் - வடசொற்கள். அஜன் - அ - திருமாலினின்று, ஜன் - தோன்றினவன்; ஹரன் - சங்காரக்கடவுள். அங்கு ஒள்தார்வேணி எனப்பிரித்து, ஒள்தார் என்பதற்கு - பிரகாசமான (கொன்றை) மாலையைத் தரித்த என்றுஉரைத்து, அங்கு என்பதை அசையாகக் கொள்ளுதலும் ஒன்று. |