பக்கம் எண் :

திருவேங்கடமாலை461

பட்டன. வைக்கும் வைகுந்த நாட்டான் - வைகுந்தநாட்டில் வைப்பவன் என விகுதி பிரித்துக் கூட்டுக. நாட்டான் - நாடு என்ற இடப்பெயரின் மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயர்.

"மருவுருவமீந்துவைக்கும்" என்றவிடத்து "மருதினிடையே தவழும்" என்றும் பாடமுண்டு; அதற்கு - மருதமரங்களின் நடுவிலே தவழ்ந்து சென்ற என்று பொருள்; இது, நாட்டானுக்கு அடைமொழி.

(68)

69.வாழம் புலியினொடு வானூர் தினகரனும்
வேழங்க ளும்வலஞ்செய் வேங்கடமே - யூழின்கட்
சற்றா யினுமினியான் சாரா வகையருளு
நற்றா யினுமினியா னாடு.

(இ - ள்.) வாழ் - (கற்பகாலமளவும் அழிவின்றி) வாழ்கின்ற, அம் புலியினொடு - சந்திரனுடனே, வான் ஊர் தினகரனும் - ஆகாயத்திற் சஞ் சரிக்கின்ற சூரியனும், வலம் செய் - பிரதக்ஷிணஞ் செய்யப்பெற்ற: வேழங் களும் - யானைகளும், வலம் செய் - வலிமை கொள்ளப்பெற்ற: வேங்கடமே -,- இனி - இனிமேல், யான் -, ஊழின்கண் - கருமவசத்திலே, சற்று ஆயினும் சாரா வகை - சிறிதும் பொருந்தாதபடி, அருளும் - (எனக்குக்) கருணைசெய்த, நல் தாயினும் இனியான் - நல்ல தாயைக்காட்டிலும் இனிய வனான திருமாலினது, நாடு - திவ்வியதேசம்; (எ - று.)

நாள்தோறும் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமித்துவருகின்ற சந்திர சூரியர்களின் சஞ்சாரம், பூமியில் உயர்ந்து தோன்றுகிற திருவேங்கடமலை யைப் பிரதக்ஷிணஞ் செய்தல் போலத் தோன்றுதலாலும், தேவாதிதேவனான திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையைச் சந்திரசூரியாதி தேவர்கள் எப்பொழுதும் பிரதக்ஷிணஞ் செய்தல் மரபாதலாலும், "அம்புலியினொடு தினகரனும் வலஞ்செய்" என்றார். வலஞ்செய்தல் - வலப்புறத்தாற் சுற்றிவருதல். "வாழ்", "வானூர்" என்ற அடைமொழிகள் - அம்புலி, தினகரன் என்ற இருவர்க்கும் பொருந்தும். திநகரன் என்ற வடசொல் - பகலைச் செய்பவ னென்று பொருள்படும். குறிஞ்சிநிலத்துப் பெருவிலங்காகிய யானைகள் அம்மலையின் வளத்தால் மிக்ககொழுமைகொண்டு ஒன்றோடொன்று பொருதும் பிறவற்றோடு பொருதும் தம்வலிமையையும் வெற்றியையுங் காட்டுதல் தோன்ற, "வேழங்களும் வலஞ்செய்" என்றனரென்க. வலம் - பலமென்ற வடசொல்லின் விகாரம்.

ஊழாவது - இருவினைப்பயன் செய்த உயிரையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி. எனது கருமங்களை யெல்லாம் ஒழித்து எனக்கு முத்தியையருளும் பேரன்புடைய கடவுளென்பது, பிற்பாதியின் கருத்து. சற்று, இனி - இடைச்சொற்கள். நல்தாய் - பெற்றதாய். தான்பெற்ற குழந்தைகட்கு ஆவனவெல்லாம் செய்யும் இயல்பு தோன்ற, "நல்தாய்" என்றார்.

(69)