பக்கம் எண் :

திருவேங்கடமாலை463

முழுவதும் செலவாய் விட்டதனால் வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச்செல்வோ ரைக் கொள்ளையடித்துவரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள் ளக்கருதித் தான் ஒருபிராமணவேடங்கொண்டு பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடன் இவரெதிரில் எழுந்தருள, இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில், அம்மணமகன் காலில் அணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு "கலியன்" என்று ஒருபெயர்கூறினானென்றும்; பின்புஇவர்பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில், அப்பொருட்குவை இடம்விட்டுப் பெயராதிருக்கக் கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி "நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்" என்று விடாதுதொடர்ந்து நெருக்க, அப்பொழுது அந்த அழகியமணவாளன், "அம் மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம்; வாரும்" என்று இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை இவர் செவியில் உபதேசித்தருளி உடனே கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவை சாதிக்க, அத் திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழி வாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும் இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாட வல்லவராய், பெரிய திருமொழி, திருக் குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல் என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளினரென்றும் வரலாறு அறிக. "வியப்பாம்" என்ற அடைமொழி - அப்பாசுரங்களின் அருமைபெருமைகளை உணர்த்தும்.

மடு - ஆற்றினுட்பள்ளம். "அப்பாம்பு" எனச்சுட்டினது, கதையை உட்கொண்டு. அன்றி, அகரச்சுட்டு - கொடுமையிற் பிரசித்தியை விளக்குவது மாம். ஆட்டினார் - ஆட்டிவருத்தியவர்; பிறவினை யிறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும்பெயர். இனி, பாம்புஆட்டினார் - பாம்பின்மேற் கூத்தாட் டையுடையவ ரெனினுமாம்; இப்பொருளில், இச்சொல் - குறிப்புவினையா லணையும்பெயர்: இன் - சாரியை. ஆட்டு - ஆடுதல்; ஆடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர். கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தநஞ்செய்து நின்று அப்பாம்பின் வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, "பாம் பாட்டினார்" என்றனரென்க.

(70)

71.ஆயுந் துறவறத்தை யண்டினமுத் தண்டினரும்
வேயுங் கிளைவிட்ட வேங்கடமே - தோயுந்
தயிர்க்காத்தாங் கட்டுண்டார் தாரணியிற் றந்த
வுயிர்க்காத்தாங் கட்டுண்டா ரூர்.