பக்கம் எண் :

464திருவேங்கடமாலை

(இ - ள்.) ஆயும் - (சிறந்ததென்று நூல்களினால்) ஆராய்ந்து கூறப்பட்ட, துறவு அறத்தை - சந்நியாசாச்சிரமத்தை, அண்டின - பொருந்திய, முத் தண்டினரும் - திரிதண்டத்தையேந்திய முனிவர்களும், கிளை விட்ட - சுற்றத்தாரைப் பற்றறக் கைவிடுதற்கிடமான: வேயும் - மூங்கில்களும், கிளை விட்ட - கிளைகளை வெளிவிட்டுச் செழித்து வளர்தற்கிடமான: வேங்கடமே -,- தோயும் தயிர்க்கு ஆ - தோய்ந்த தயிரைக் களவுசெய்து உண்டதற்காக, தாம் கட்டுண்டார் - தாம் கட்டுப்பட்டவரும், தாரணியில் - உலகத்தில், தந்த - (தம்மாற்) படைக்கப்பட்ட, உயிர் - உயிர்களை, காத்து - பாதுகாத்து, ஆங்கு - அதன்பின்பு, அட்டு - அழித்து, உண்டார் - விழுங்கியவருமான திருமாலினது, ஊர் -; (எ - று.)

மூன்று முங்கில்களை ஒருங்குசேர்த்துக் கட்டினதாகிய திரிதண்டத்தைக் கையிற்கொள்ளுதல், வைஷ்ணவ சந்யாசிகளின் இயல்பு. துறவிகள் முக்கோல்பிடித்தல் காமம்வெகுளி மயக்க மென்னும் முப்பகையையும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்னும் ஈஷணாத் திரயங்களையும் வென்று அடக்கியதற்கும், சித் அசித் ஈசுவரன் என்னும் தத்துவத்திரயத்தைக் கைப்பற்றினமைக்கும் அறிகுறியாகுமென்பர். ஆயுந்துறவறம் - தத்துவப்பொருளை ஆராய்தற்கு உரிய துறவறமுமாம்: துறவறம் - பற்றுக்களைத் துறந்து செய்யும் ஒழுக்கம். தண்டு - தண்டமென்ற வடசொல்லின் விகாரம். "முத்தண்டினர் கிளைவிட்ட" என்றதனால், அவர்களுடைய ஒழுக்கச்சிறப்பை உணர்த்தியவாறு. வேய்க்குக் கிளைவிடுதல் - கப்புவிடுதல்.

ஆ - விகாரம். கட்டுண்டார் என்பதில், உண் என்ற துணைவினை - செயப்பாட்டுவினைப்பொருளை யுணர்த்தும். கண்ணன்இளமைப்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைக் களவுசெய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை அக்குற்றத்துக்கு ஒருதண்டனையாகக் கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற் கட்டி உரலோடு பிணித்துவைத்தன ளென்பது அறிக. நித்தியமான உயிர்களை "தந்தவுயிர்" என்றது, அவற்றிற்கு உடலுறுப்புக்களைத் தந்தமை பற்றி யென்க. திரிமூர்த்தி சொரூபியாய் நின்று படைத்தல் காத்தல் அழித்தல் செய்பவரும், பிரளயகாலத்தில் அனைத்துயிரையும் வயிற்றினுள் வைத்துப் பாதுகாப்பவரும் திருமாலேயாதலால், "தாரணியில் தந்த வுயிர்க் காத்து ஆங்கு அட்டு உண்டார்" என்றார். உயிர் காத்து என இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாமல் வரவேண்டிய தொடர், திரிபுநயம்நோக்கி "உயிர்க்காத்து" என வலிமிக்கது; இது, விரித்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தின்பாற் படும்.   

(71)

72.தொண்டொடுமெய் யன்புடையார் தூய்மனமுஞ் சந்தனமும்
விண்டொடுபொற் பாம்பணைசேர் வேங்கடமே - தண்டொடுவாள்
கோலமருங் கார்முகத்தார் கோடாழி யார்குழையின்
கோலமருங் கார்முகத்தார் குன்று.