(இ - ள்.) தொண்டொடு - பணிவிடை செய்தலுடனே, மெய் அன்பு உடையார் - உண்மையான பக்தியை யுடைய அடியார்களது, தூய் மனமும் - பரிசுத்தமான உள்ளமும், விண்டொடு பொன் பாம்பு அணை சேர் - திருமாலுடனே அழகிய ஆதிசேஷ சயநத்தைத் தியானிக்கப் பெற்ற: சந்தனமும் - சந்தனமரங்களும், விண் தொடு பொற்பு ஆம் பணை சேர் - (உயர்ச்சியால்) ஆகாயத்தை அளாவிய பொலிவான கிளைகள் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- தண்டொடு - கதாயுதத்துடனே, வாள் - வாளாயுதத்தையும், கோல் அமரும் கார்முகத்து - அம்புகள் பொருந்திய வில்லையும், ஆர் கோடு - ஒலிக்கின்ற சங்கத்தையும், ஆழியார் - சக்கரத்தையும் உடையவரும், குழையின் கோலம் மருங்கு ஆர் முகத்தார் - குண்டலங்களின் அழகு (இரண்டு) பக்கங்களிலும் பொருந்திய திருமுகத்தை யுடையவருமான திருமாலினது, குன்று - திருமலை; (எ - று.) தொண்டு - கைங்கரியம். மெய்யன்பு - மனப்பூர்வமாகிய பக்தி. ஆதி சேஷனாகிய சயனத்திற் பள்ளிகொண்டிருக்கின்ற திருமாலை அடியார்கள் உள்ளத்திற்கொண்டு தியானிக்கின்றன ரென்க. விஷ்ணு என்ற வடசொல், விண்டு எனச் சிதைந்தது. சேர்தல் - இடைவிடாது நினைத்தலாதலை, திருக்குறளில் "மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்" என்றவிடத்துப் பரி மேலழகருரையாலும் அறிக. கிளைகளுக்கும் வானத்துக்கும் சம்பந்தமில்லா திருக்கச் சம்பந்தத்தைக் கூறினது, தொடர்புயர்வுநவிற்சியணி; இது, கிளைகளின் மிக்கஉயர்வை விளக்கும். பொற்பு - உரிச்சொல். திருமாலின் பஞ்சாயுதங்களுள், கதை கௌமோதகி யென்றும், வாள் நந்தக மென்றும், வில் சார்ங்க மென்றும், சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் சுதர்சநமென்றும் பெயர்பெறும். கார்முகம் - வடசொல்; கர்மத்தில் (அதாவது (போர்த்) தொழிலில்) வல்லதென்று பொருள்படும். ஆர் கோடு - வினைத்தொகை; ஆர்த்தல் - ஒலித்தல். கோடு, வளை என்பன - பரியாய நாமம். ஆழி - (பகைவரை) அழிப்பது; அல்லது, வட்டவடிவமானது. ஆர்முகம் - வினைத்தொகை; ஆர்தல் - பொருந்துதல். இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க. (72) | 73. | கிட்டுநெறி யோகியருங் கிள்ளைகளுந் தங்கூடு | | விட்டுமறு கூடடையும் வேங்கடமே - யெட்டுமத | | மாவென்று வந்தான் வரநாளை வாவின்று | | போவென் றுவந்தான் பொருப்பு. | (இ - ள்.) கிட்டும்நெறி யோகியரும் - (முத்தியை) விரைவிற் சேரும் உபாயமான யோகத்திற் பயில்கிற முனிவர்களும், தம் கூடு விட்டு மறு கூடு அடையும் - தமது சரீரத்தை விட்டு வேறு சரீரத்திற் புகப்பெற்ற; கிள்ளைகளும் - கிளிகளும், தம் கூடு விட்டு மறுகு ஊடு அடையும் - தாம்வசிக்கிற கூண்டை விட்டு நீங்கி வீதிகளிற் சேரப்பெற்ற: வேங்கடமே -,- மதம் எட்டு மாவென்று வந்தான் - மதம்பிடித்த அஷ்டதிக்கஜங்களைச் சயித்து |