வந்தவனான இராவணன், வர - (தன் எதிரிற் போருக்கு) வர, (அவனை உடனே எளிதில் வென்று), இன்று போ நாளை வா என்று - "இன்று போய் நாளைக்கு வா" என்று சொல்லி, உவந்தான் - (அவனிடத்து) அன்புகாட்டிய வனான திருமாலினது, பொருப்பு - திருமலை; (எ - று.) நெறி - மார்க்கம். யோகியர் தம் கூடுவிட்டு மறுகூடு அடைதல் - தம் உயிர் தம் உடம்பைவிட்டுநீங்கி வேறோருடம்பினுட் புக்குத் தொழில்செய்யு மாறு செய்தல்; இது, பரகாயப்பிரவேச மென்னுஞ் சித்தி. பறவைகள் வசிக்குங் கூடுபோல உயிர் தங்குமிடமாதலாலும், உயிர்கூடுமிட மாதல்பற்றியும், உடம்பு "கூடு" என்று பெயர்பெறும். கிள்ளை - பெயர்த்திரிசொல். மறுகூடு, ஊடு - ஏழனுருபு. அடைதல் - உட்புகுதலும், சேர்தலும். இராவணன் திக்விஜயகாலத்தில் இந்திரன் முதலிய தேவர்களோடு பொருகையில் ஐராவதம் முதலிய திக்கஜங்களை யெதிர்த்து அவற்றின் தந்தங்களை ஒடித்து அவற்றை வலிதொலைத்தனென அறிக. இராமபிரான், முதல்நாட்போரில் தன்சேனை முழுவதும் படைக்கலமனைத்தும் அழியத் தனியனாய் அகப்பட்ட இராவணனது எளிமையை நோக்கி இரங்கி மேலும் போர்செய்யாது நிறுத்தி "இன்றுபோய் நாளை நின்படையொடு வா" என்று கூறி விட்டன னென்பது வரலாறு; "ஆளையா வுனக் கமைந்தன மாருத மறைந்த, பூளையாயின கண்டனை யின்றுபோய்நீ போர்க்கு, நாளைவாவென நல்கினன் நாகிளங் கமுகின், வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்" என்ற கம்பராமாயணச்செய்யுள் இங்கே காணத்தக்கது. இங்ஙனம் பகைவனிடத்து அருள்கொண்டு அவனைவிடுதல், தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையாம்; அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச் செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது. இதனால், இராமபிரானது காம்பீரியம், கருணை, அறத்தின்வழிநிற்றல் முதலிய திருக்கலியாணகுணங்கள் விளங்கும். "மதமா" எனவே, யானையாயிற்று; விலங்கின் பொதுப்பெயராகிய "மா" என்பது - "மதம்" என்ற அடைமொழியால், சிறப்பாய் யானையை உணர்த்திற் றென்க. எட்டுமதமா - ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனப் பெயர் பெறும்; இவற்றைக் கிழக்கு முதலாக முறையே கொள்க. நாளை, இன்று என்பன முறையே எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையுங் காட்டும் இடைச்சொற்கள். மூன்றாமடியில் உவந்தான் எனப் பதம்பிரித்துக் களிப்புக்கொண்டவனென்று பொருளுரைத்து, நான்காமடியில் வந்தான் என்று பதம்பிரித்துப் போரொழிந்து மீண்டானென்று பொருளுரைப்பினும் அமையும். (73) | 74. | மட்டுவளர் சாரலினு மாதவத்தோர் சிந்தையினும் | | விட்டு மதிவிளங்கும் வேங்கடமே - கட்டுசடை | | நீர்க்கங்கை யேற்றா னிரப்பொழித்தா னீள்குறளாய்ப் | | பார்க்கங்கை யேற்றான் பதி. | (இ - ள்.) மட்டு வளர் சாரலினும் - (மலர்களினின்றும் கூண்டுகளினின்றும்) தேன் பெருகிவழியப்பெற்ற (அம்மலையின்) பக்கங்களிலும், மதி விட்டு |