விளங்கும் - சந்திரன் (ஒளியை) வீசி விளங்கப்பெற்ற: மா தவத்தோர் சிந் தையினும் - பெருந்தவத்தையுடைய முனிவர்களது மனத்திலும், விட்டு மதி விளங்கும் - திருமாலை விஷயமாகக் கொண்ட ஞானச்சுடர் விளங்கப்பெற்ற: வேங்கடமே -,- கட்டு சடை - தொகுத்துக் கட்டிய சடையில், நீர் கங்கை - கங்கைநீரையுடைய, ஏற்றான் - ரிஷபவாகனனான சிவபிரானது, இரப்பு - யாசித்தலை, ஒழித்தான் - நீக்கியருளியவனும், நீள் குறள் ஆய் - (பின்பு) நீண்டு வளருந்தன்மையுள்ள வாமநவடிவங்கொண்டு, பார்க்கு - உலகத்தைப் பெறும்பொருட்டு, அம் கை ஏற்றான் - அழகிய கையில் (மகாபலி தந்தநீரை) ஏற்றுக்கொண்டவனுமான திருமாலினது, பதி - திவ்வியதேசம்; (எ - று.) பதி - திருப்பதி. மட்டு வளர் சாரல் - மலர்களின் நறுமணம் வீசப் பெற்ற மலைப்பக்கமுமாம். சாரல் - சார்தல்; மலையைச் சார்ந்த பக்கத்துக் குத் தொழிலாகுபெயர். சாரலிற் சந்திரன் விளங்குமென அம்மலையின் உயர்வை விளக்கியவாறு. மதி - சந்திரனென்னும் பொருளில், (பலராலும்) மதிக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்; அறிவைக் குறிக்கையில், வட சொல். விஷ்ணு என்ற வடசொல், விட்டு என விகாரப்பட்டது. ஏற்றான் என்றது - மூன்றாமடியில் ஏறு என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும், நான்காமடியில் ஏல் என்ற வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம். ஏறு - பசுவின் ஆண்மைப்பெயர். நீள் குறள் - இனி நீளுங் குறள் என எதிர்கால வினைத்தொகை. குறள் - குறுகிய வடிவம். "நீள்குறள்" என்றது, "ஆலமர்வித்தி னருங்குற ளானான்" என்றபடி மிகப்பெரிய திரிவிக்கிரம வடிவத்தை உட்கொண்ட மிகச்சிறிய வாமநவடிவ மென்க. பார் -பார்க்கப்படுவது, அல்லது பருமையுடையது எனக் காரணப்பொருள்படும். (74) | 75. | புக்கவரு மாதவரும் பூமதுவுண் வண்டினமு | | மெய்க்கவசம் பூண்டிருக்கும் வேங்கடமே - யொக்கவெனை | | யன்பதினா லாண்டா ரரிவையொடுங் கானுறைந்த | | வன்பதினா லாண்டார் வரை. | (இ - ள்.) புக்க - அங்கு வருகின்ற, அரு மா தவரும் - அரிய பெரிய தவத்தையுடைய முனிவர்களும், மெய் கவசம் பூண்டு இருக்கும் - சத்தியமாகிய கவசத்தைத் தரித்திருக்கப்பெற்ற: பூ மது உண் வண்டு இனமும் - மலர்களிலுள்ள தேனைக் குடிக்கின்ற வண்டுகளின் கூட்டமும், மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் - (அம்மதுபானத்தாலாகிய மயக்கத்தால் தமது) உடம்பில் தம்வசம் தப்பிப் பரவசமாந்தன்மையைக் கொண்டிருக்கப்பெற்ற: வேங்கடமே -,- ஒக்க - (தமது மெய்யடியாரை) ஒப்ப, எனை - (அடிமைத்திறமில்லாத) என்னையும், அன்பு அதினால் ஆண்டார் - அன்பினால் ஆட்கொண்டவரும், அரிவையொடும் - சீதாபிராட்டியுடனே, கான் உறைந்த - வனத்தில் வசித்த, வல் பதினால் ஆண்டார் - கொடிய பதினான்கு வருடங்களையுடையவருமான திருமாலினது, வரை - திருமலை; (எ - று.) |