பக்கம் எண் :

திருவேங்கடமாலை469

பொங்கு ஓதம் நீர் - பொங்குகிற அலைகளையுடைய கடலை, அடைத்து - அணை கட்டி மறித்து, மீண்டு - பின்பு, ஆர்க்கும் ஆறு - ஆரவாரிக்கும்படி, உடைத்தார் - (அத்திருவணையை) உடைத்தருளினவருமான திருமாலினது, வெற்பு - திருமலை; (எ - று.)

மனு - காசியபமுனிவரது மனைவியருள் ஒருத்தி; இச்சொல் - இங்கு இலக்கணையாய், அவளினிடமாகத் தோன்றிய மனிதர்களை உணர்த்திற்று. வளைதல் - சூழ்தல். அக்கு - ருத்திராக்ஷமாலையுமாம். அக்கரவம் பூண்டார் க்கு மால் துடைத்தார் - சிவபிரானது கையில் ஒட்டிய கபாலத்தை விடுவித் தவர்; அன்றி, சிவபிரானுக்கு அஜ்ஞாநமயக்கம் நீங்குமாறு தத்துவஞானத்தை உபதேசித்தவ ரெனினுமாம்.

இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி அதற்கும் இந்தப்பூமிக்கும் இடையிலுள்ள கடலில் வானரங்களைக்கொண்டு மலைகளால் அணைகட்டி அதன்வழியாக இலங்கைபுக்கு அரக்கரைத் தொலைத்து மீளுகையில், இராக்கதராசதானியான இலங்கையி லுள்ளார்க்கும் இப்பூமியிலுள்ள மனிதர்க்கும் போக்குவரவு இல்லாமலிருத் தற்பொருட்டும், கடலிடையே மரக்கலமியங்குதற்பொருட்டும் அச்சேதுவை உடைத்தன ரென்ற வரலாற்றை இங்கு அறிக.

(76)

77.நீடு கொடுமுடியு நீதிநெறி வேதியர்கள்
வீடு மகமருவும் வேங்கடமே - கோடுங்
கருத்துளவ மாலையார் காணாம னின்ற
மருத்துளவ மாலையார் வாழ்வு.

(இ - ள்.) நீடு கொடுமுடியும் - உயர்ந்த அம்மலைச் சிகரங்களும், மகம் மருவும் - (வானத்திற்செல்லும்) மகநட்சத்திரம் பொருந்தப்பெற்ற: நீதி நெறி வேதியர்கள் வீடும் - நியாயமார்க்கத்தில் நடக்கின்ற அந்தணர்களுடைய கிருகங்களும், மகம் மருவும் - யாகங்கள் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- கோடும் கருத்துள் - நேர்மைதவறிய மனத்தில், அவம் மாலையார் - வீண்எண்ணங்களின் வரிசைகளை யுடையவர்கள் (அடிமைக்கருத்தில்லாதவர்கள்), காணாமல் - (தமது சொரூபத்தைக்) காணவொண்ணாதபடி, நின்ற - (அவர்கட்குப் புலப்படாது) நின்ற, மரு துளவம் மாலையார் - நறு மணமுள்ள திருத்துழாய் மாலையை யுடையவரான திருமால், வாழ்வு - எழுந்தருளி யிருக்குமிடம்; (எ - று.)

நீடு கொடுமுடி - வினைத்தொகை. மலைச்சிகரத்தைக் கொடுமுடியென் றல், மேல்வளைந்திருத்தலால்; கொடுமை - வளைவு. "கொடுமுடி மகம்மருவும்" என்றது, அம்மலைச்சிகரங்களின் மிக்கஉயர்வை விளக்கும் தொடர்புயர்வு நவிற்சியணி. மகம் என்றது, மற்றை நக்ஷத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் உபலக்ஷணம். வேதியர் - வேதம் வல்லவர்; கள் - விகுதிமேல்விகுதி. "அவர்கள்வீடு மக மருவும்" எனப் பிரித்து, அவர்கள் வீடு புத்திரபாக்கியம் பொருந்தப்பெற்ற என்று உரைப்பினும் அமையும்.