லோகத்துக்) கற்பகவிருட்சத்தை அளாவப்பெற்ற: வேங்கடமே -,- வல்கோடு கூர் இரு வராகனார் - வலிய கொம்பு (கோரதந்தம்) கூர்மையாக இருக்கப்பெற்ற பெரிய பன்றி வடிவமானவரும், கோகனகை பூமி என்னும் ஓர் இருவர் ஆகனார் - ஸ்ரீதேவியும் பூதேவியும் என்னும் ஒப்பற்ற இருவரையுந் தழுவும் திருமார்பை யுடையவருமான திருமாலினது, ஊர் - திருப்பதி.(எ - று) கோடு - மலைச்சிகரமுமாம். நாரி, சண்பகம், கற்பகம் - நாரீ, சம்பகம், கல்பகம் என்ற வடசொற்களின் விகாரம். சண்பகத்தின்கிளைக்கு மென்மை, கண்ணுக்கு இனிமை. அகம் - உள்ளுறுப்பு; அந்த:கரணம் கல்பகம் - வேண்டுவார்க்கு வேண்டும் பொருள்களைக் கல்பிப்பது; இது, தேவதரு. கோடு - வாயின் இருபுறத்தும் வளைந்து வெளித்தோன்றும் எயிறு. கோக நகை - தாமரைமலரில் வாழ்பவள்; கோகநதா என்ற வடசொல் கோகநகை யென விகாரப்படும். ஆகம் - மார்பு; அதனையுடையவன், ஆகன்; அதன்மேல் "ஆர்" என்ற பலர்பால்விகுதி உயர்வுபற்றி வந்தது. (79) | 80. | கோடஞ்சுங் கோதையர்கள் கொங்கையினுங் குஞ்சரத்தும் | | வேடன் சரந்துரக்கும் வேங்கடமே - சேடனெனு | | மோர்பன் னகத்திடந்தா னுற்றா னிரணியனைக் | | கூர்பன் னகத்திடந்தான் குன்று. | (இ - ள்.) கோடு அஞ்சும் - மலைச்சிகரம் (ஒப்புமைக்கு எதிர்நிற்க மாட்டாமல்) அஞ்சும்படியான, கோதையர்கள் கொங்கையினும் - மாதர்களுடைய தனங்களிலும், வேள் தன் சரம் துரக்கும் - மன்மதன் தனது புஷ்ப பாணத்தைச் செலுத்தப்பெற்ற: குஞ்சரத்தும் - யானைகளின்மீதும், வேடன் சரம் துரக்கும் - வேட்டுவன் அம்புகள் செலுத்தப்பெற்ற: வேங்கடமே -,- சேடன் எனும் - ஆதிசேஷனென்கிற, ஓர் பன்னகத்து இடம் - ஒப்பற்ற தொரு பாம்பினிடத்தில், உற்றான் - பொருந்தியவனும், இரணியனை - இரணி யாசுரனை, கூர் பல் நகத்து இடந்தான் - கூரிய பல கைந்நகங்களினால் (மார்பைப்) பிளந்தவனுமான திருமாலினது, குன்று - திருமலை; (எ - று.) கோடு - யானைத் தந்தமுமாம் "அஞ்சும்" என்பதை உவமவுருபாகவுங் கொள்ளலாம். சேஷன் என்ற வடசொல் - (பிரளயகாலத்திலும் அழிவின்றி) மிச்சமாய் நிற்பவ னென்றும், பந்நகம் என்ற வடசொல் - பத் ந கம் என்று பிரிந்து கால்களால் நடவாதது (மார்பினால் ஊர்வது) என்றும், ஹிரண்யன் என்ற வடசொல் - பொன்னிறமானவ னென்றும் காரணப்பொருள்படும். "சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு" என்றபடி ஆதிசேஷனால் அநேகவித கைங்கரியஞ் செய்யப்பெறுபவ னென்பது தோன்ற, "சேடனெனு மோர் பன்னகத்திடம் தான்உற்றான்" என்றார். தான் - அசை. இடந்தான் என்பதில், இட - பகுதி; இடத்தல் - கீளுதல். (80) |