பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி493

காப்பு.

காப்பு காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமதுஎண்ணத்தைமுடிக்கவல்ல தலைமைப்பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், விஷ்ணு பக்தர்களிற்சிறந்த ஆழ்வாரைக்குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளின் அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படுமென அறிக. அவ்வாழ்வாரால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட்கருத்துக்களமைய அம்முதனூலுக்கு வழி நூல்போலச் செய் யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வணக்க மென்று அரிதிற்கொள்ளவும் அமையும்.

நல்லவந்தா திதிருவேங்கடவற்குநான்விளம்பச்
சொல்லவந்தாதின்வழுபொருட்சோர்வறச்சொல்வித்தருள்
பல்லவந்தாதிசைவண்டார்குருகைப்பரசமயம்
வெல்லவந்தா திமறைதமிழாற்செய்தவித்தகனே.

(இ - ள்.) பல்லவம் - (சோலைகளிலுள்ள மரங்களின்) தளிர்களிலும், தாது - பூந்துகளிலும், இசை வண்டு ஆர் - (நறுமணத்தையுட்கொள்ளும் பொருட்டு) இசைபாடுகிற வண்டுகள் மொய்க்கப்பெற்ற, குருகை - திருக்குரு கூரென்னுந்திருப்பதியிலே, பர சமயம் வெல்ல வந்து - (ஸ்ரீவைஷ்ணவ மதமல்லாத) அயல்மதங்களை வெல்லுமாறு திருவவதரித்து, ஆதி மறை தமி ழால் செய்த - பழமையான வடமொழிவேதங்களைத் தமிழ்ப்பாஷையினால் (திவ்வியப்பிரபந்தங்களாகச்) செய்தருளிய, வித்தகனே - ஞானசொரூபியா யுள்ளவனே! - நல்ல அந்தாதி - நல்ல அந்தாதியென்னும் பிரபந்தத்தை, திருவேங்கடவற்கு - திருவேங்கடமுடையான்விஷயமாக, நான் விளம்ப - நான் பாடுமாறு, சொல் அவம் - சொற்குற்றங்களும், தாதின் வழு - வினைப் பகுதிகளின்குற்றங்களும், பொருள் சோர்வு - பொருட்குற்றங்களும், அற - சிறிதுமில்லாதபடி, சொல்வித்து அருள் - சொல்வித்தருள்வாய்; (எ - று.)

சொற்குற்றம் பொருட்குற்ற மின்றிக் கவிபாடுமாறு எனக்கு நல்ல கவநசக்தியை அருள்புரிக வென்று பிரார்த்தித்தார். "என்னாவிலின்கவி யா னொருவர்க்குங் கொடுக்கிலேன், தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து, என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே" என்று நம்மாழ்வார் அறுதியிட்டு ஆதிமறை தமிழாற் செய்த வித்தக ராதலால், தாம் திருவேங்கடமுடையான் விஷயமாகத் தமிழ்நூல்செய்தற்கு அவ்வாழ்வாரருளை வேண்டின ரென்க.