உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, 'உற்றழைக்க வருவேம் கடத்தும்பி அஞ்சலென்றோடின மால்கழல்' என்றார். உற்றழைக்க வருவேங்கடத் தும்பி யஞ்சலென்றோடின மால் - "முன் தவித்து ஆனை வாவென வந்தான்" என்பர் அழகரந்தாதியிலும். நின்றன, நடந்தன, இருந்தன, ஓடின என்ற மாறுபட்ட சொற்கள் நான்கையும் நான்கடிகளிலும் நிறுத்தினது, முரண்தொடை யென்னும் செய்யுளிலக்கணத்தின்பாற்படும். நிற்றல் முதலிய செயல்களை இடவேறு பாட்டினாலும் காலவேறுபாட்டினாலும் 'மால்கழல்' என்ற ஒருபொருளுக்கே ஏற்றியுரைத்தது முரண்விளைந்தழிவணியாதலும், 'மால்கழல்' என்பது ஈற்றில்நின்று 'நின்றன' 'நடந்தன' 'இருந்தன' என்னுஞ் சொற்களோடு இயைதல் கடைநிலை விளக்காதலும் அறியத்தக்கவை. எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக்கூறவேண்டுவது மரபாதலால், "திரு" என்று தொடங்கினார். கீழ்க் காப்புச்செய்யுளை "நல்ல" என்று தொடங்கினதும் இதன்பாற்படும். (1) 2. | மாலைமதிக்குஞ்சியீசனும்போதனும்வாசவனு | | நூலைமதிக்குமுனிவருந்தேவருநோக்கியந்தி | | காலைமதிக்குள்வைத்தேத்துந்திருமலைகைம்மலையால் | | வேலைமதிக்கும்பெருமானுறைதிருவேங்கடமே | (இ - ள்.) மாலை - அந்திமாலைப்பொழுதில் விளங்குகின்ற, மதி - பிறைச் சந்திரனைத் தரித்த, குஞ்சி - தலைமயிர்முடியையுடைய, ஈசனும் - சிவபிரானும், போதனும் - பிரமதேவனும், வாசவனும் - தேவேந்திரனும், நூலை மதிக்கும் முனிவரும் - சாஸ்திரங்களை ஆராய்ந்தறிகிற முனிவர்களும், தேவரும் - தேவர்களும், அந்தி - மாலைப்பொழுதிலும், காலை - காலைப்பொழுதிலும், நோக்கி - தரிசித்து, மதிக்குள் வைத்து - தமது அறிவில் வைத்து (மனத்திற்கொண்டு தியானித்து), ஏத்தும் - துதிக்கப்பெற்ற, திரு மலை - சிறந்த மலை, (எதுவென்றால்-,) கை மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறை திருவேங்கடமே - (தனது) கைகளாகிய மலைகளைக்கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையேயாம்; (எ - று.) இச்செய்யுள், ஊர் அல்லது பதி எனப்படுகிற பிரபந்தத்துறை அமை யக் கூறியது; "இன்னசிறப்புடையது பிரபந்தத்தலைவனதுவாழிடம்" என்ற வாய்பாடுபொருந்தக் கூறுதல், இதன்இலக்கணமாம். திருவேங்கடமுடையான் தேவாதிதேவனான திருமாலாதலால், மற்றைத் தேவர் முனிவர் முதலியயாவரும் அவனெழுந்தருளியிருக்கிற அவ்விடத்தைச் சந்தியாகாலமிரண்டிலும் தரிசித்துத் தியானித்துத் துதித்து வழிபடுவரென்க. இங்ஙனஞ்சிறப்புடைய மலையாதல்பற்றித் திருமலையென்று தென்மொழியிலும், ஸ்ரீசைல மென்றுவடமொழியிலும் திருவேங்கடத்துக்குச் சிறப்பாகப்பெயர்வழங்கும். |