பக்கம் எண் :

498திருவேங்கடத்தந்தாதி

மாலைமதி யெனவே பிறையாயிற்று; கொன்றைமாலையையும் சந்தி ரனையுந் தரித்த சடைமுடி யென்று உரைப்பாரு முளர்: மாலைபோல மதி யையணிந்த முடி யெனினுமாம். சந்திரன் தக்ஷமுனிவனது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின் வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை "க்ஷயமடைவாயாக" என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங்குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தன னென்ற வரலாறுபற்றி, "மாலைமதிக் குஞ்சியீசன்" என்றார். திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் சந்திரனும் தோன்ற, திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல் தணிந்திருக்கும்பொருட்டு உடனே சந்திரனையுங்கொடுக்க, அதனை அப்பெருமான் சிரமேற்கொண்டனனென்றும் வரலாறு கூறப்படும்.

மதி - (பலராலும் நன்கு) மதிக்கப்படுவ தெனப் பொருள்படுங் கார ணக்குறி. குஞ்சி - ஆண்மயிர். (குடுமி சிகை பங்கி என்பனவும் இது, ஐம்பால் ஓதி கூந்தல் கோதை என்பன, பெண்பால்மயிரின்பெயர்.) ஈசன், வாஸவன், தேவர், மதி (அறிவு), வேலா - வடசொற்கள். ஈசன் - ஐசுவரிய முடையவன். போது - பூ; இங்குச் சிறப்பாய்த் தாமரைமலரைக் குறித்தது. திருமாலினது நாபித்தாமரைமலரில் தோன்றியதனால், பிரமனுக்குப் போதன் என்று பெயர். போதம் - அறிவு; வடசொல்; அதனையுடையவன் போதனென்று காரணப்பெயராக உரைத்தலு மொன்று. வாஸவன் என்ற பெயர் - அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவனென்றும் காரணப்பொருள்படும்; வசு - தேவர்களில்ஒருபகுப்பினரும், செல்வமுமாம். தேவர் - விண்ணுலகத்தில் வாழ்பவர். அந்தி - ஸந்த்யா என்ற வடசொல்லின் சிதைவு. காலைச்சந்திக்கும் மாலைச்சந்திக்கும் பொதுவான இது, இங்குச் சிறப்பாய் மாலைச்சந்தியின்மேல் நின்றது.

(கைம்மலையால் வேலைமதிக்கும் பெருமான் - "தானவ ரும்பருள்ளாய், ஈருருநின்று கடைந்தது" என்ற திருவரங்கத்துமாலையையும், "தாமரைக் கைந்நோவ, ஆழிகடைந்து" என்ற கம்பராமாயணத்தையுங் காண்க.) வேலை மதித்த வரலாற்றால், தன்சிரமம் பாராமல் தன்னைச் சரணமடைந்தாரைப் பரிபாலிக்கும் பகவான துகருணை வெளியாம். கைம்மலை யென்பதை முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை யெனக்கொண்டு, கைம்மலையால் என்பதற்கு - மலைகள்போன்ற கைகள்கொண்டுஎன்று கருத்துக்காண்க; தனது கைவசப்படுத்தின மந்தரகிரியால் என்று பொருள்கொள்ளுதலும் அமையும். பெருமான் - பெருமையையுடையவன்; மான் - பெயர்விகுதி. ஈற்றுஏகாரம்.