பக்கம் எண் :

502திருவேங்கடத்தந்தாதி

திருவேங்கடமுடையானிடம் பக்திசெய்தொழுகுவார்க்கு மிகஎளிதில் தவறாது முத்தி சித்திக்கு மென்பதாம். "மாயவன்" முதலியன - ஒருபொ ருளின்மேல்வந்த பலபெயர்கள். கண்ணன் - க்ருஷ்ணன் என்ற வடசொல்லின் சிதைவு; அப்பெயர் - கருநிறமுடைய னென்றும், (யாவர்மனத்தையும்) இழுப்பவ னென்றும், (எல்லாவற்றையுஞ்) செய்பவ னென்றும், மற்றுஞ் சிலவகையாகவும் பொருள்படும். மணிஎன்பது - நவமணிகட்கும் பொதுப் பெயராகவும், நீலமணிக்குச் சிறப்புப்பெயராகவும் வழங்கும். வர்ணம் என்ற வடசொல், வண்ண மெனச் சிதைந்தது. கேசவன்என்ற திருநாமத்துக்கு - பிரமனையும் சிவனையும் தன்அங்கத்திற் கொண்டவ னென்றும் (க - பிரமன், ஈச - சிவன்), கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் , மயிர்முடி யழகுடையவ னென்றும் (கேசம் - மயிர்) பொருள்கொள்ளலாம். மண்ணும் விண்ணுந் தாவியது, திரிவிக்கிரமாவதாரத்தில். இவ்வரலாற்றால், கொடிய வரை யடக்குதற்கு வேண்டிய தந்திரம் வல்லவ னென்றவாறு.

கண் நன்கமலமொப்பான் - புண்டரீகாக்ஷன். நன் கமலம் - நீர்வளம் மிக்க தடாகத்தில் அன்றுஅலர்ந்த செழித்த செந்தாமரைமலர். இலங்கை யரசனாய் நல்லோர்க்கெல்லாம் பொல்லாங்குசெய்துவந்த இராவணனைத் திருமால் இராமாவதாரத்தில் தலைதுணிந்துஅழித்திட்டமை, பிரசித்தம். தாயவன் - தா - பகுதி; இதுவே தாவு என உகரம்பெற்று வழங்குவது: ய் - இடைநிலை, அ - சாரியை. வன்கண்மை - எதற்கும் தான்அஞ்சாமை; அனைவரையுந் தான் அஞ்சுவித்தல்: கண்ணோட்டமில்லாத கொடுந்தன்மை. லங்கா, சிரஸ், வைகுண்டம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. இலங்கை - கடல்சூழ்ந்த தீவு. தூரம் - வடசொல்.

(5)

6.தூரவிரும்புண்டரிக்குமிக்காயத்தைச்சூழ்பிணிகா
ணேரவிரும்புண்டரர்க்கருள்வானெடுவேங்கடத்தா
னீரவிரும்புண்டரீகப்பொற்பாதங்களென்னுயிரைத்
தீரவிரும்புண்டநீராக்குமாறுள்ளஞ்சேர்ந்தனவே.

(இ - ள்.) நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் - (குறுக்காகவன்றி) நேர்மையாக விளங்குகிற திருமண்காப்பையுடையவர்களான ஸ்ரீவைஷ்ண வர்களுக்கு அருள்செய்பவனாகிய, நெடு வேங்கடத்தான் - நெடிய திருவேங் கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய, ஈரம் இரும் புண்டரீகம் பொன் பாதங்கள் - குளிர்ச்சியான பெரிய செந்தாமரைமலர்போன்ற பொலிவுபெற்ற திருவடிகள், - என் உயிரை - எனது உயிரை, தீர - முழுவதும், இரும்பு உண்ட நீர் ஆக்கும் ஆறு - (காய்ந்த) இரும்பு உட்கொண்ட நீர் போலாக்கும்படி (தம்மிடத்து லயப்படுத்தும்படி), உள்ளம் சேர்ந்தன - என் மனத்திற் சேர்ந்துவிட்டன; (ஆதலால்), புண் தரிக்கும் இ காயத்தை சூழ்பிணிகாள் - மாமிசத்தைக்கொண்ட (எனது) இந்த உடம்பைச் சூழ்ந்துள்ள நோய்களே! தூரம் இரும் - (நீங்கள் என்உடலைவிட்டுத்) தூரத்திற் போய்ப் பிழையுங்கள்; (எ - று.)