"எனைக்கைக்கொள் உடல், கைக்குஞ்சரமதசையி லஞ்சேலென்றென் கண்முன்வந்தே,ழு. "பொறியைந்தழியுமக்கால, லத் திரங்கா யரங்கா வடியே னுன்னடைக்கலமே" என்றார் திருவரங்கத்தந்தாதியிலும். "எய்ப்பென்னை வந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போ தைக்கிப்போதேசொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே," "சாமிடத்தென்னைக் குறிக்கொள்கண்டாய் சங்கொடு சக்கரமேந்தினானே" என்ற பெரியாழ்வார்திருமொழி இதற்கு மூலம். பஞ்சுஒழுக்கியபால் வார்ந்துஉக - "பாலுண்கடைவாய்படுமுன்னே" என்றார் பட்டணத்துப்பிள்ளையும்; இதனை "வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே, கடைவழி வார" என்ற பெரியாழ்வாரருளிச்செயலோடுஒப்பிடுக. விக்கும் பொழுதில் - "நாச்செற்று விக்குள்மேல்வாராமுன்" என்றார் திருவள்ளுவரும். கவி - கபி யென்ற வடசொல்லின் விகாரம். கவிக்கும் என்ற உம்மை - இழிவுசிறப்பு; எதிரதுதழுவியஎச்சமாகக்கொண்டு, பின்பு விபீக்ஷணனுக்கு இலங்கையில்முடிசூட்டியதையும் அமைத்துக்கொள்ளலாம். சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் என்பதிலுள்ள சொல்நயங் காண்க; "கவித்தானைமன் னற்கு நட்பாய் முடிகவித்தான்" என்பர் அழகரந்தாதியிலும். கவிக்கும் முடி, மகரவொற்று - விரித்தல்விகாரம். இதயம் - ஹ்ருதயம் என்ற வடசொல்லின் சிதைவு. உகவித்தல் - உகத்தல் என்பதன் பிறவினை; வி - பிறவினைவிகுதி. இரண்டாமடியில், கவிக்கும் என்று பதம்பிரித்து, நின்மேற் கவிசொல்லுகைக்கும் வரங்கொடுத்தா யென்று உரைப்பாரு முளர். கொண்டல் - நீர்கொண்டமேகம்; தொழிலாகுபெயர். தண்டலையென்பது - தண்தலை என்று பிரிந்து, குளிர்ச்சியான இடத்தையுடையது என்று பொருள்படும்; பண்புத்தொகையன்மொழி. கவித்தல் - மூடுதல். (7) | 8. | வந்திக்கவந்தனை கொள்ளென்றுகந்தனுமாதவருஞ் | | | சிந்திக்கவந்தனை வேங்கடநாத பல்சீவன்றின்னு | | | முந்திக்கவந்தனைச்செற்றாயுனக்குரித்தாயபின்னும் | | | புந்திக்கவந்தனைச்செய்தைவர்வேட்கைபொருமென்னையே. | (இ - ள்.) "வந்திக்க - (அடியோம்) வணங்க, வந்தனை கொள் - அவ் வணக்கத்தை அங்கீகரிப்பாய்", என்று - என்று பிரார்த்தித்து, கந்தனும் - முருகக்கடவுளும், மாதவரும் - பெருந்தவமுடையவரான முனிவர்களும், சிந்திக்க. தியானிக்க, வந்தனை - (அவர்கட்குப்) பிரதியக்ஷமாக வந்துதோன் றினாய்; வேங்கடம் நாத - திருவேங்கடமலைக்குத் தலைவனே! பல் சீவன் தின்னும் உந்தி - பலபிராணிகளையும்தின்கிற வயிற்றையுடைய, கவந்தனை - கவந்தனென்னும் அரக்கனை, செற்றாய் - கொன்றவனே! உனக்கு உரித்து ஆய பின்னும் - (எனதுஉயிர்) உனக்குஉரியதானபின்பும், ஐவர் வேட்கை - பஞ்சஇந்திரியங்களின்சம்பந்தமான ஆசை, புந்திக்கு அவம்தனை செய்து - (எனது) அறிவுக்கு அபாயத்தைச்செய்து, என்னை பொரும் - என்னைத்தாக்கி வருத்தும்: (இது என்ன அநீதி! என்றபடி); (எ - று.) - ஈற்றுஏகாரம் - இரக்கத்தைக் காட்டும். |