பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி507

பறவை ஒருதரம்கத்துகிற பொழுதளவேனும், என் ஒரு வல்லி பொறாள் - என்னுடைய தனித்த பூங்கொடிபோன்ற இம்மங்கை சகிக்கமாட்டாள்; (ஆதலால்), கண்பார்த்துஅருள்வாய் - (இவள்பக்கல்) கடாக்ஷம்வைத்து அருள்செய்வாயாக; (எ - று.)

கீழ் எட்டுப்பாசுரங்களில் திருவேங்கடமுடையானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அப்பெருமானது திவ்வியசௌந்தரியத்தில் ஈடுபட்டு அவனது உத்தமபுருஷத்தன்மையைக் கருதியதனாலே, அப்பொழுதே அவ னைக்கிட்டவேண்டும்படியான ஆசை யுண்டாய், அங்ஙனம் அவனைக்கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமைமீதூர்ந்து தளர்ந்தார்; அத்தளர்ச்சியாலே தாமானதன்மை குலைந்து ஆண்பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டிநிலையை யடைந்தார்; ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், - "கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்," "வாராக வாமனனே யரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்" என்ப வாதலாலே, இதுகூடும்: தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானதுசௌ ந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்தன்மையைப்பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர்மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க. "கண்ணனுக்கே யாமது காமம் அறம்பொருள்வீ டிதற்கென் றுரைத்தான், வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே" என்பதன் பொருளும் அறியற்பாலது. ("பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதறு முலையினாள்," "வாண்மதர்மழைக்கணோக்கி ......... ஆண்விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே" எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.) அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப்பெண்மையையேயன்றி எம் பெருமானுக்கு உரியவளாகும் ஒருபிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், - பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும், புருஷோத்தம னாகிய எம்பெருமானது பேராண்மைக்குமுன் உலகமுழுவதும் பெண்தன்மையதாதலும், ஜீவாத்மாவினதுஸ்வாதந்திரியமின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும் முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமா ரோ டொக்கச் சொல்லத் தட்டில்லை. தோழிநிலைமையும் தாயார்நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனேயென்னில், - தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙனமாகு மென்க.

தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட் கிளவித்துறைகளை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலை இலக்கியங்கள்கொண்டு உணர்க. சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப்பிரபந்தங்களிற்கூறுதற்குக் காரணம், கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார் போல, சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்