தொனியாகக்கத்துகிற மிகஇரங்கத்தக்க சிறுகுரலும் காமோத்தீபகமாய்ப் பிரிவாற்றாமைத்துயரை வளர்த்துப் பிரிந்தகாமுகரை வருத்து மென்றல், கவிமரபு. மாலைப்பொழுது கலவிக்குஉரிய காலமான இரவின் தொடக்கமாதலால், அதுவும் பிரிந்தார்க்குத் துயர்க்கு ஏதுவாம். கவலையின்றிப் பலவிடத்தும் இனிதுகண்ணுறங்குகிற நீ இவ்விளமகள் துயில்பெறாது வருந்துதலை மாற்றவேண்டாவோ? என்ற குறிப்புத் தோன்ற "பொருதரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்கருதரங்கத்தும் துயில் வேங்கடவ கண்பார்த்தருள்வாய்" என்றாள். கண்பார்த்தருளல் - கண்ணோட்டங் கொண்டு மீளவும்வந்து இவளை வெளிப்படையாக மணஞ்செய்து கொள்ளுதல். "ஒரு" என்றது - தனிமையையும், "வல்லி" என்றது - துயர் பொறுக்கமாட்டாத மெல்லியலா ளென்பதையுங் காட்டும். ஆலிலையிற்கண் வளர்தல், பிரளயப்பெருங்கடலில். திருவனந்தபுரம் - மலைநாட்டுத் திருப்பதி பதின்மூன்றில் ஒன்று. அரங்கம் - சோழநாட்டுத் திருப்பதிநாற்பதில் ஒன்று; நூற்றெட்டுத் திவ்வியதேசங்களுள் தலைமைபூண்டது. தரங்கம், வடம், அநந்தபுரம், ரங்கம், அங்கம், வல்லீ - வடசொற்கள். நிருதர் - நைருதரென்ற வடசொல்லின் விகாரம்; நிருருதியென்ற தென் மேற்குத்திக்குப்பாலகனது மரபின ரென்பது பொருள். "பொரு தரங்கம்" என்பதை அடையடுத்தசினையாகுபெய ரென்றாவது, வினைத்தொகையன் மொழி யென்றாவது கொள்க. வடம் என்ற ஆலமரத்தின் பெயர் - அதன் இலைக்கு முதலாகு பெயர். அரங்குஎன்ற சொல்லுக்கு உள்ளிடமென்று ஒரு பொரு ளுள்ளதனால், "அன்பர்கருதரங்கத்து" என்பதற்கு - மெய்யன்புடைய ரான அடியார்கள் தியானிக்கின்ற மனத்திலும் என்றும் பொருள் கொள்ளலாம். நான்காமடியில், உம் - இழிவுசிறப்பு. வல்லி - கொடி; பெண்ணுக்கு உவமையாகுபெயர்: மெல்லியதாய் ஒல்கியொசியும் வடிவில் உவமம். "கண்பார்த்தருளாய்" என்பதும் பாடம். திருவேங்கடமுடையான் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கானபொழுதே அவனைக்கிட்டி முத்தியின்பமனுபவிக்கும்படியான ஆசை கொண்ட அவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக்கொள்ளாது மறைய, அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் லௌகிகபதார்த்தங்களைக் குறித்து வருந்த, அதுகண்ட அன்பர்கள் அவருடைய அத்தன்மையை எம்பெருமான்பக்கல் விண்ணப்பஞ்செய்து, இனி இவரை வருந்தாதபடி விரைவிற்சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்; விவரம் கேட்டு உணர்க. (9) (தலைவனைப்பிரிந்த தலைவி கடலொடு புலம்பல்.) | 10. | ஒருமாதவனியொருமாதுசெல்வியுடனுறைய | | | வருமாதவனின்மகுடம்வில்வீசவடமலைமேற் | | | கருமாதவன்கண்ணனின்பாற்றிருநெடுங்கண்வளர்கைக் | | | கருமாதவமென்னசெய்தாய் பணியெனக்கம்புதியே. | |