(இ - ள்.) அம்புதியே - கடலே! - ஒரு மாது அவனி - ஒருமனைவியான பூதேவியும், ஒருமாது செல்வி - மற்றொருமனைவியான ஸ்ரீதேவியும், உடன் உறைய - (தன்னைவிட்டுப்பிரியாது எப்பொழுதும்) தன்னுடன் இருக்கவும், வரும் ஆதவனின் மகுடம் வில் வீச - உதயமாகிவருகின்ற சூரியன் போலக் கிரீடமானது ஒளியைவீசவும், வடமலைமேல் கரு மாதவன் கண்ணன் - வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையின் மீது வாழ்கிற கரியதிருமேனியையுடைய மாதவனென்றும் கிருஷ்ணனென்றுந் திருநாமங்களையுடைய திருமால், நின்பால் திரு நெடுங் கண் வளர்கைக்கு - உன்னிடத்திலே அழகிய நீண்ட திருக்கண்களை மூடி நித்திரைசெய்தற்காக, அரு மா தவம் என்ன செய்தாய் - (நீ) அரிய பெரிய எவ்வகைத்தவத்தைச் செய்தாய்? எனக்கு பணி - எனக்குச் சொல்வாய்; (எ - று.) "போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடல் அணி மருதம் - நோக்குங்கால், இல்லிருக்கை முல்லை இரங்கல் நறுநெய்தல், சொல்லிருக்கு மைம்பால்தொகை" என்றபடி இரங்கல் நெய்தல் நிலத்துக்கு உரியதாதலாலும், அந்நெய்தனிலந்தான் கடலும் கடல்சார்ந்தஇடமு மாதலாலும், அந்நிலத்திலே தலைமகனைப்பிரிந்து வருந்துகின்ற தலைமகள் அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி, "திருமால் எப்பொழுதும் உன்னிடத்திலேபொருந்தி இனிதுகண்துயிலுமாறு நீ என்ன தவஞ்செய்தாய்? சொல்" என்று இரங்கிக்கூறின ளென்க. நீ அதனைச்சொல்லினையாயின், அவனோடு ஒரோசமயத்துக் கூட்டுறவுபெற்றுப்பின்பு பிரிந்து வருந்துகின்ற யானும் அவ்வகைத்தவத்தைச்செய்து அப்பெருமான் என்றும் என்னைவிட்டுப்பிரியாது என்பக்கல் இனிதுகண்துயிலும்படி பெறுவே னென்பது, குறிப்பு. "மாலுங்கருங்கடலே யென்னோற்றாய் வையகமுண், டாலினிலைத்துயின்ற வாழியான் - கோலக், கருமேனிச்செங்கண்மால் கண்படையு ளென்றுந், திருமேனி நீ தீண்டப்பெற்று" என்ற ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இது. தலைமகனோடுகூடியுறைகின்ற தலைவியரைக் கண்டு பொறாமை கொள்ளுதல், தலைவனைப் பிரிந்துறைகின்ற தலைவியரியல்பு: அக்குறிப்பு இப்பாட்டில் "ஒருமாதவனி யொருமாதுசெல்வி யுடனுறைய" என்ற வார்த்தையில் தோன்றுதல் காண்க; ஸ்ரீதேவியும் பூதேவியும் போலத் தானும் எம் பெருமானுக்குஉரிய ஒருபிராட்டிநிலையைப் பெறுமாறு வேண்டின ளென்பதும் அவ்வார்த்தையிற் புலனாம். "உவர்க்குங்கருங்கடல்நீருள்ளான்" என்னும்படி திருமால் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருளு மென்று ஒருபிரமாணசித்தியுண்டாகையாலே, திருப்பாற்கடலையேயன்றி இக்கருங்கடலையே இங்ஙனம் வினாவின ளென்க. "வருமாதவனின் மகுடம் வில்வீச" என்றது, திருமுடியும் கிரீடமும் சேர்ந்த சேர்த்தியா லாகிய செயற்கையழகில் தலைவி ஈடுபட்டதைக் காட்டும். உறைய, வீசக் கண்வளர்கைக்கு என்று இயையும். உறைய, வீச - வினைச் செவ்வெண். மாது - விரும்பப்படும் அழகுடைய பெண். அவநி, ஆதபன், மகுடம், மாதவன், மஹாதபஸ், அம்புதி - வடசொற்கள். அவநி - (அரசராற்) |