பக்கம் எண் :

512திருவேங்கடத்தந்தாதி

பெயர் எல்லாப்பதவிகட்கும்மேலான இடத்தையுடையவ ரென்றும், எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவ ரென்றும் பொருள்படும்; தாமம் - இடமும், ஒளியும். கேசரியென்னும் வாநரசிரேஷ்டனது மனைவியாகிய அஞ்சநாதேவி திருவேங்கடமலையை அடைந்து பலகாலம் தவம்புரிந்து அநுமானாகிய புத்திரனைப் பெற்றதனால், இம்மலை, அஞ்சநாசலமென்று ஒரு பெயர்பெற்ற தெனப் புராணங்கள் கூறுகின்றன. ஆடகமாம் அம்பரம் - பொற்பட்டாடை. மூன்றாமடியில், தாம் - அசை. சூழ்தல் - சுற்றிலும்தரித்தல். எம்பெருமானைவாழ்த்துதல் மிக்கஅன்பின்செயலாதலை, பெரியாழ்வார் பல்லாண்டுபாடியதுகொண்டும் உணர்க.

"அம்பரம் கூறையும் கடலும் ஆகாயமும்" என்ற திவாகரம், இங்கு உணரத்தக்கது. தாமரை - தாமரஸ மென்ற வடசொல்லின் விகாரம். அவயவம், பரந்தாமர், ஹாடகம், அம்பரம் - வடசொற்கள். அவயவரை, தாமரை, வெற்பரை, சூழ்ந்தாரை என்பன - ஒருபொருளின் மேல்வந்த பலபெயர்கள். விசேஷணம் விசேஷ்யம் என்ற இரண்டிலும் வேற்றுமையுருபு விரித்தது, வடமொழிநடை. அஞ்சனவெற்பர் - விசேஷ்யம்; மற்றவை - விசேஷணங்கள். அரை என்ற எண்ணலளவுப்பெயர் - உடம்பின் நடுவிலுள்ள உறுப்புக்கு ஆகுபெயராம். வாழ்த்திலர் - எதிர்மறைப்பலர்பால் முற்றெச்சம். ஐம்புலவின்பங்களினாசைக்கு எல்லையில்லை யென்பது தோன்ற, "ஐம்புலனாமம்பரம்" என்றார். தா மரை - வினைத்தொகை; தாம் மரை யென்று பிரித்து, தாம் என்பதைத் தாவும் என்ற செய்யுமெனெச்சத்து ஈற்று உயிர்மெய்சென்றதாகவுங் கொள்ளலாம். ஐம்புலன் - ஐம்புலங்களாலாகிற, நாமம் - அச்சம், பரந்து - மிகப்பெற்று, ஆ - ஐயோ! மரைபோல் திரிவாரை என்று பொருள்கூறுதல், க்லிஷ்டகற்பனை (நலிந்துபொருள் கொள்ளுதல்) என்னுங் குற்றத்தின்பாற் படுமென விடுக்க.

இச்செய்யுளில் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றிநின்று வெவ்வேறுபொருள்விளைத்தல், இடையிட்டுவந்த முதல் முற்றுமடக்கு எனப்படும் யமகமாம்; மேல் - 20, 31, 39, 47, 57, 72, 89 ஆஞ் செய்யுள்களிலும் இது காண்க. செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்தியமென்பது இலக்கணநூலார்துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வருமடியின் முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப்பட்டிலது, யமகவமைப்பின் பொருட்டு; இதனை, இங்ஙனம் வரு மிடங்கட்கெல்லாங் கொள்க.

(11)

(தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்.)

12.நெஞ்சுகந்தத்தையுமக்குரைத்தே னிற்றைநீடிரவொன்
றஞ்சுகந்தத்தைவிளைக்குமென்னாசையதா மிதழ்சொல்
கிஞ்சுகந்தத்தையனையீ ரிங்கென்னைக்கெடாதுவிடும்
விஞ்சுகந்தத்தைவிளைக்குந்துழாயண்ணல்வேங்கடத்தே.

(இ - ள்.) இதழ் - வாயிதழும், சொல் - சொல்லும், (முறையே), கிஞ்சுகம் - முருக்கமலரையும், தத்தை - கிளிகொஞ்சிப்பேசும் பேச்சையும்,