அனையீர் - ஒத்திருக்கப்பெற்றவர்களே! - நெஞ்சு உகந்தத்தை - (என்) மனம் விரும்பியதை, உமக்கு உரைத்தேன் - உங்கட்குச் சொல்லுகின்றேன்:- இற்றை நீடு இரவு ஒன்று - இன்றைத்தினத்து நீண்ட இராத்திரி யொன்றுமே, அஞ்சு உகம் - ஐந்துயுகமாக வளர்ந்து, தத்தை விளைக்கும் - துன்பத்தை மிகுவிக்கின்றது; அது என் ஆசை ஆம் - அது யான்கொண்ட காதலின் காரியமாம்; இங்கு என்னை கெடாது - (இனி நீங்கள்) என்னை இங்கேயே (வைத்திருந்து) கெடுத்திடாமல், விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தேவிடும் - மிக்க நறுமணத்தைவீசுகின்ற திருத்துழாய்மாலையைத் தரித்த தலைவனுடைய திருவேங்கடமலையினிடத்தே (என்னைக் கொண்டுபோய்ச்) சேர்த்திடுங்கள்; (எ - று.) தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள் அப்பிரிவுத் துயரை ஆற்றியடக்கும் வல்லமையிலளாகித் தனது நிலைமையை அன்புடைத் தோழியர்க்கு வெளிப்படையாகவுரைத்து "இனி நான் பிழைத்திருக்கவேண்டில், என்னை நீங்கள் அத்தலைவன் முன்னிலையிற் கொண்டுபோய்ச்சேர்த்திடுங்கள்" என்றுவேண்டுகின்றாளென்க. என்மனத்திலுள்ளதை என்மனத்தோடொத்த உயிர்ப்பாங்கியரான உங்கட்குமாத்திரமே அந்தரங்கமாகச் சொல்லுகின்றேன்; என்பக்கல் அன்பிலரான பிறர் அறியவேண்டா என்பது, "நெஞ்சுகந்தத்தை யுமக்குரைத்தேன்" என்றதன் குறிப்பு. "ஊழிபல வோரிரவாயிற்றோவென்னும்," "ஊழியிற்பெரிதால்நாழிகையென்னும்ஒண்சுடர்துயின்றதாலென்னும்", "இது ஓர் கங்கு லாயிரமூழிகளே" என்றபடி கூடியநிலையில் ஒருகணமாகக்கழிகிற இரவு பிரிந்தநிலையில் அநேகயுககாலமாக நீட்டித்துத்தோன்றுகின்றமைபற்றி, "நீடிரவொன்று அஞ்சுகம்தத்தை விளைக்கும்" என்றாள். "இற்றைநீடிரவு" என்றதனால், தலைவனைப்பிரிந்து அப்பிரிவுத்துயரையாற்றாமல் பகலினும் இரவில்மிகவருந்தி அரிதிற்சிலநாள் கழித்த தலைவி அவ்வருத்தம் நாளுக்குநாள் மிகுதலால் இரவும் ஒருநாளைக்கொருநாள் மிகநீட்டித்ததாகத் தோன்றக் கண்டு, முன்பு ஒரு நாளாயும் ஒரு மாதமாயும் ஒரு வருடமாயும் ஒரு யுகமாயும் படிப்படியாகவளர்ந்து தோன்றிவருத்தி வந்த இரவு இன்றைக்குப் பலயுகங்களாகத் தோன்றிவருத்துகின்றது என்று ஒருநாளிரவிற் கூறினளாம். தன்விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடியழைப்பவளாய், "இதழ்சொல் கிஞ்சுகந் தத்தை யனையீர்" என்று புனைந்துரைத்து விளித்தாள். தான் இனி ஒருபொழுதேனும் இங்குஇருந்து பிழைக்கும் வகையிலளானமை தோன்ற, "இங்குஎன்னைக் கெடாது" என்றாள். தலைவன் தானாகவருமளவும் பார்த்து ஆறியிருக்கின்ற இயல்பை இழந்து அவனுள்ளவிடத்தேசென்று அவன்முகத்தைக் கண்டு பிழைக்கலாமென்றும், அவன்கண்ணெதிரிற்சென்றுநின்றால் அவன்கண்ணோட்டத்தைப்பெறலா மென்றுங் கருதி விரைவில் அங்குச்செல்லவிரும்பிய தலைவி, தனக்குக் கால்நடைதாராதபடி வலியழிவுமிக்கதனால் தான் அங்குச்சென்று சேரமாட்டாது, தன்கண்வட்டத்திலேநின்று தன்நிலையை நோக்கிக் கால்நடைதளராததோழியரைத் தன்னை அங்குக்கொண்டுபோய் விடுமாறு வேண்டினள்; நீங்கள் என்குறிப்பறிந்து என்துயர்தீர்த்திலிரா |