பக்கம் எண் :

594திருவேங்கடத்தந்தாதி

(அதனைக்) கொன்று, பித்தன் நா மன் அம் காந்த அன்று ஓட எய்தோன் - சிவன் (தனது) நாவிற்பொருந்திய நீர் வற்றுமாறு அக்காலத்தில் (பாணாசுரயுத்தத்தில்) ஓடும்படி அம்பெய்தவனும், நறும் பூ கொடிக்கு தாமன் அம் காந்தன் - பரிமளமுள்ள தாமரைமலரில் வாழ்கின்ற கொடிபோன்ற பெண்ணுக்கு (திருமகளுக்கு) இருப்பிடமானவனும் அழகிய கணவனுமான, திருவேங்கடத்து எந்தை - திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய, தாள்களில் - திருவடிகளில், என் தீ மனம் - எனது கொடியமனமானது, காந்தம் கவர் ஊசிபோல் சேர்வது - காந்தத்தினாற் கவரப்பட்ட ஊசிபோலச் சேர்ந்துபற்றுவது, என்று - எப்பொழுதோ? (எ - று.)

மாமன் - இங்கே, தாயுடன்பிறந்தவன். மன் அம் - வினைத்தொகை. நாமன்அம் காந்த - நாஉலர. கொடி - உவமையாகுபெயர். பூங்கொடி - மலர்க்கொடிபோன்றவ ளெனினுமாம். திருமகளைத் திருமார்பில் வைத்துள்ளதனால், "நறும்பூங்கொடிக்குத்தாமன்" எனப்பட்டான். ஊசி - ஸூசீ என்ற வடசொல்லின் விகாரம். எந்தைதாள்களில் என்தீமனம் காந்தங்கவரூசி போற்சேர்வது - "இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத், திரும்பிப் பார்க்கவொட்டாமல்" திருவடிக், கரும்பைத்தந்து" என்பர் பிறரும். காந்தம். இரும்பைக் கவர்ந்து இழுத்தல், வெளிப்படை.

(85)

86,சேருமறுக்கமுநோயுமரணமுந்தீவினையின்
வேருமறுக்கவிரும்பிநிற்பீர் வடவேங்கடத்தே
வாரு மறுக்கவறியா னெவரையும்வாழவருள்
கூருமறுக்கமலையணிமார்பன் கைக்கோதண்டனே.

(இ - ள்.) சேரும் - (கருமகதியால் வந்து) அடைகின்ற, மறுக்கமும் - மனக்குழப்பங்களையும், நோயும் - வியாதிகளையும், மரணமும் - மரணத்தையும், தீவினையின் வேரும் - கொடியகருமத்தின்மூலத்தையும், அறுக்க - ஒழிப்பதற்கு, விரும்பி நிற்பீர் - விருப்பங்கொண்டு நிற்பவர்களே! (நீங்கள்), வடவேங்கடத்தே வாரும் - வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையினிடத்தே வாருங்கள்: (அங்கு எழுந்தருளியிருக்கிற), மறு கமலை அணி மார்பன் - (ஸ்ரீவத்ஸமென்னும்) மறுவையும் இலக்குமியையுங் கொண்ட (வலத்திரு) மார்பை யுடையவனும், கை கோதண்டன் - கையில் வில்லை யுடையவனுமான திருமால், எவரையும் மறுக்க அறியான் - (தன்னைச் சரணமடைந்தவர்) எத்தன்மையராயினும் அவரை விலக்க அறியான்: (எவரையும்) வாழ அருள்கூரும் - தனது அடியவரனைவரையும் இனிதுவாழுமாறு கருணைபுரிவன்: (எ - று.)

அடியார்களின் பிழைகளைப் பாராட்டாது பொறுத்து ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாகிற திருமகள் எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடனிருக்கப்பெற்றவ னாதலால் அனைவரையும் மறாது அருள்செய்வ னென்பது தோன்ற, 'மறுக்கவறியான் எவரையும் வாழ அருள்கூரும் கமலையணி மார்பன்' என்றார். இடையிலுள்ள 'எவரையும்' என்றதை மத்திமதீபமாகக் கொண்டு, முன்நின்ற 'மறுக்கவறியான்' என்றதனோடும், பின்நிற்கும் 'வாழவருள்கூரும்' என்பதனோடுங் கூட்டுக. மறுக்கம் - தொழிற்பெயர்.  

(86)