பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி595

87.கோதண்டத்தா னத்தன் வாள்கதைகேமியன் கோலவட
வேதண்டத்தானத்த னின்னிசையான் மண்ணும்விண்ணுமுய்ய
மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்
தீதண்டத்தானத்தனுவெடுத்தானெனிற்றீநரகே.

(இ - ள்.) கோதண்டத்தான் - வில்லையுடையவனும், நத்தன் - சங்கத்தையுடையவனும், வாள்கதைநேமியன் - வாளையும் கதையையும் சக்கரத்தையுமுடையவனும், கோலம் வட வேதண்டத்தான் - அழகிய வடமலையான திருவேங்கடத்தை இடமாகவுடையவனும், அத்தன் - (எல்லாவுயிர்கட்குந்) தலைவனும், இன் இசையான் - இனிமையான வேய்ங்குழலினிசையையுடையவனுமான திருமால், மண்ணும் விண்ணும் உய்ய - நிலவுலகத்திலுள்ள மனிதர்முதலியோரும் மேலுலகத்திலுள்ள தேவர்முதலியோரும் துன்பந்தவிர்ந்து வாழ்தற்காக, மூது அண்டம் தானத்து - பழமையான அண்டத்துக்கு உட்பட்ட இடங்களில், அவதரித்தான் - திருவவதாரஞ்செய்தான், எனில் - என்று (மெய்ம்மையுணர்ந்து) கூறினால், முத்தி - பரமபதங் கிடைக்கும்; (அத்திருமால்), வினை தீது அண்ட - ஊழ்வினையின்தீமை வந்து தொடர, தான் அ தனு எடுத்தான் - தான் அந்தந்தத்தேகத்தை யெடுத்துப் பிறந்தான், எனில் - என்று (உண்மையுணராது) கூறினால் தீ நரகே - கொடியநரகமே நேரும்: (எ - று.)

ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றி, பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள்செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டும் தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல், அவதாரரஹஸ்யஜ்ஞாந மெனப்படும். இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவையென்றுகொண்டு அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாணகுணங்களில் ஈடுபட்டுத் துதிப்பவர் முத்தியையடைவர்: அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்றுகொண்டு இகழ்பவர் நரகமடைவர் என்பது, கருத்து. "தராதலத்து, மீனவதாரமுதலானவை வினையின்றி யிச்சை, யானவதாரறிவா ரவரே முத்தராமவரே" என்பர் அழகரந்தாதியிலும்.

திருமால் பஞ்சாயுதங்களை யுடைமையை 'கோதண்டத்தான் நத்தன்வாள் கதை நேமியன்' என்று குறித்தார். வேதண்டம் - மலை. இன்இசையான் - கேட்டற்கு இனிய புகழையுடையவ னெனினுமாம். மண், விண் - இடவாகுபெயர்.

(87)

88.நரகமடங்கலுஞ்சென்றெய்த்தபாவிக்குநாரியர்மேல்
விரகமடங்கமெய்ஞ்ஞானம்வெளிசெயவீடுபெற
வரகமடங்கநடித்தபொற்றாளின்றென்னுச்சிவைப்பாய்
வரகமடங்கயலானாய் வடமலைமாதவனே.