(இ - ள்.) வரம் கமடம் கயல் ஆனாய் - சிறந்த ஆமையும் மீனுமாய்த் திருவவதரித்தவனே! வடமலை மாதவனே - திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! - நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு - (இதுவரையிலும் பலபிறப்புக்கள்பிறந்து பலதீவினைகளைச்செய்து) நரகங்களனைத்திலும் போய் வருந்திய பாவியான எனக்கு, நாரியர்மேல் விரகம் அடங்க - மகளிர்விஷயமாக உண்டாகின்ற ஆசைநோய் தணியவும், மெய் ஞானம் வெளி செய - தத்துவஞானம் தோன்றவும், வீடு பெற - பரமபதம் கிடைக்கவும், உரகம் மடங்க நடித்த பொன் தாள் இன்று என் உச்சி வைப்பாய் - (காளியனென்னும்) பாம்பு தலைமடங்கும்படி (அதன்முடியின்மேலேறி) நடனஞ்செய்த (நினது) அழகியதிருவடிகளை இப்பொழுதே எனது சிரசின்மேல் வைத்தருள்வாய்: (எ - று.) அடங்கலும் என்றது, எஞ்சாமை குறித்தது, எய்த்தல் - இளைத்தல், மெலிதல். பாவிக்கு - தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. பாபீ, நாரீ, விரஹம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. பாவி - தீவினைசெய்தவன். மெய்ஞ்ஞானம் - பிறப்புவீடுகளையும் அவற்றின்காரணங்களையும் பரமாத்மஜீவாத்மஸ்வரூபங்களையும் விபரீதஐயங்களாலன்றி உண்மையால் உணர்தல். உரகம் என்ற வடசொல் - மார்பினால் (ஊர்ந்து) செல்வதென்று பொருள்படும். பொன் தாள் - பொன்னினாலாகிய கழலென்னும் அணியை அணிந்த திருவடி யெனினுமாம்: இப்பொருளில், பொன் - கருவியாகுபெயர். வர கமடம் - வடமொழித்தொடர். கண்ணன் காளியனுடைய முடியின்மே லேறி, ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ அந்தந்தப்படத்தைத் துவைத்து அழுத்திநின்று அப்பாம்பின்வலிமையை அடக்கி அதனை மூர்ச்சையடையச்செய்கையில், பலவகைநடனத்திறங்களைச் செய்துகாட் டியமை தோன்ற, 'உரகமடங்க நடித்த பொற்றாள்' என்றார். அத்தன்மையை, 'ஸ்வாமி, நர்த்தநமுறையில் வட்டமாய்ச்சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும், ஒரு பக்கத்திலிருந்து மற்றொருபக்கத்துக்குப் போவது முதலிய ரேசககதிகளினாலும், பாதத்தை முன் நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச்சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்' என்ற விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக. "கானகமாமடுவிற் காளியனுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர," "காளியன்பொய்கை கலங்கப்பாய்ந்திட்டவன், நீண்டமுடியைந்திலு நின்று நடஞ்செய்து" என்ற பெரியாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க. முன்னொருகாலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்து செல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் ஒரு பெருமீனாகத்திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து கொடுத்தன னென்றும்; திருப்பாற்கடல் கடைந்தபொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி திருமால் மகாகூர்ம |