சாரல் வழி - அழகிய மலைப்பக்கத்து வழியாக, வரில் - (நீ) வந்தால், இ பாவையும் வாடும் - (நினதுவரவை மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்ப்பவளான) இப் பெண்ணும் வருந்துவள்; (எ - று.) இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளினது தோழியி னுதவியைக்கொண்டு தலைமகளைப் பகலிலும் இரவிலும் களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும். தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே அத்தலைமகனையுந் தலைமகளையுஞ் சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு, அவன் வரும்நெறியின் அருமையையும், அது கருதித் தாங்கள் அஞ்சுதலையுங்குறித்து "நீ எந்த இடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய தேகபலம் மநோபலம் தந்திரம் வஞ்சனை படைக்கலத்தேர்ச்சி இவற்றையுடையாயாயினும், நின்வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்றுதலால், இனி இவ்விருளிடை நீ இங்ஙனம் வரற்பாலையல்லை' என்று கூறி விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள் துறையாம்; இது, ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியின்பாற்படும்; (ஆறு - வழி, கிளவி - பேச்சு:) தலைவன் வரும் வழி மிகவும் இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது, கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவ தென்க. இதில், மெய்ப்பாடு - அச்சம். இதன் பயன் - வெளிப்படையாகவந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல். முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகைநிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியா மென்பதும், "புணர்தல் நறுங்குறிஞ்சி" என்றபடி புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குஉரிய பொரு ளென்பதும், "குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்" என்ற படி பெரும்பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள் நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய கால மென்பதும் அறியத்தக்கன. "துறைமதியாம லிக்கான்யாறுநீந்திச் சுரங்கடத்தல், நிறைமதியாளர்க் கொழுக்கமன்றால் நெடு மாலரங்கத், திறைமதியாவருமாராவமிர்தன்ன விந்தநுதற், குறைமதியாள் பொருட்டாற் கங்குல்வார லெங்கொற்றவனே" என்ற திருவரங்கக்கலம் பகச்செய்யுளையுங் காண்க. சாரல் - மலையைச் சார்ந்தது; மலைப்பக்கம்: தொழிலாகு பெயர் 'இப்பாவை' என்றது, தலைமகளை; உம்மையால், தோழி தான்வாடுதலையும் உணர்த்தினாளாம். அஞ்சாமை, வலிமை, தந்திரம், மாயை, ஐம்படை இவற்றையுடைமையால் எவ்வகைச்செயலையுஞ் செய்யவல்லவனான சர்வேசுவரன், இருள்போலப் பொருள்களை உள்ளபடி எளிதிற் காணவொண்ணாது மறைப்பதான மாயையின் பிரசாரத்தையுடைய இந்த இருள்தருமாஞாலத்திலே ஐயங்கார் வாழும்பொழுது அவரது நெஞ்சென்னும் உட்கண்ணுக்கு ஒரோசமயத்து இலக்காகி மறைய, நிரந்தராநுபவத்திலே பிரியமுடையரான ஐயங்கார், அவ்வளவிலே திருப்திப்படாததோடு, பொங்கும்பரிவுடைய பெரியாழ் |