பக்கம் எண் :

600திருவேங்கடத்தந்தாதி

வார்போல, எம்பெருமானுடைய ஸர்வசக்தித்வம் முதலிய திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே எதிர்ப்பட்ட சௌந்தர்ய சௌகுமார்யங்களில் ஈடுபட்டு, 'காலாதீதமான வைகுண்டத்திலேயிருக்கின்ற இவ்வரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்தில்வந்து புலனாதலால் இதற்கு என்ன தீங்குவருமோ?' என்று அதிகமானபயசங்கை கொண்டவராக, அந்த அதிசங்கையை ஐயங்காரது அன்பர்கள் எம்பெருமான் பக்கல்விண்ணப்பஞ்செய்து, இனி இவர்க்கு இவ்வகைக்கலக்கமுண்டாகாதபடி இவரைக் காலாதீதமான வைகுண்டத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் கேட்டுணர்க. இரணியன் இராவணன் முதலியோர் எவ்வளவோ சாமர்த்தியமாக வேண்டிப்பெற்ற வரங்களெல்லாம் ஒவ்வொருவகையால் ஒதுங்கும்படி சூழ்ச்சி செய்து அவர்களையழித்தமையும். துரியோதனன் முதலியோர் செய்த அளவிறந்தசூழ்ச்சிகட் கெல்லாம் மேம்பட்ட சூழ்ச்சிசெய்து அவர்களைத்தொலைத்தமையும் பற்றி, 'வலியார்க்கு முபாயம் வல்லாய்' என்றார்.

(91)

92.பாவையிரங்குமசோதைக்குமுத்துப் பதுமச்செல்விக்
கேவையிரண்டன்னகண்மணிநீல மிருசரணப்
பூவையிரந்தவர்க்கின்பவளம் புல்லசுரர்க்கென்று
மாவையிரந் திருவேங்கடத்தோங்குமரகதமே.

(இ - ள்.) திருவேங்கடத்து ஓங்கும் மரகதம் - திருவேங்கடமலையின் மீது உயர்ந்துதோன்றுகின்ற மரகதரத்தினம்போல விளங்குந் திருமேனி நிறத்தையும் ஒளியையுமுடைய பரம்பொருளானது, - பாவை இரங்கும் அசோதைக்கு - சித்திரப்பிரதிமைகளும் (இவ்வகையழகு எமக்கு இல்லையே யென்று) இரங்கும்படியான (கட்டழகுடைய) யசோதைக்கு, முத்து - (அருமையால்) முத்துப்போலும்; பதுமம் செல்விக்கு - தாமரைமலரில் வீற்றிருக்கின்ற செல்வத்தலைவியான திருமகளுக்கு, இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் - (அருமையால்) இரண்டு அம்புகளைப்போன்ற கண்களிலுள்ள கருவிழிபோலும்; இரு சரணம் பூவை இரந்தவர்க்கு - உபயதிருவடித்தா மரைமலர்களைப் பிரார்த்தித்தவர்கட்கு, இன்ப வளம் - பேரின்பப் பெருக்காம்; புல் அசுரர்க்கு - இழிகுணமுடைய அசுரர்கட்கு, என்றும் - எப்பொழுதும், மா வையிரம் - பெரும்பகையாம்; (எ - று.)

திருவேங்கடத்துஓங்கும் மரகதரத்தினமொன்றே யசோதைத்தாய்க்கு முத்தாகவும், பெரியபிராட்டிக்கு நீலமணியாகவும், அடியார்க்குப் பவளமாகவும், அசுரர்க்கு வைரமாகவும் ஆகின்றது எனச் சொற்போக்கில் ஒருவகை வியப்புத் தோன்றக் கூறியது, பலபடப்புனைவணி. இதில் பஞ்சரத்தினங்களின்பெயர் அமைந்திருப்பது காண்க. யசோதை - கண்ணனை வளர்த்த தாய்; நந்தகோபன் மனைவி. அருமைக்குழந்தையாகிய கண்ணன் அவளால் "முத்து" என்று பாராட்டப்படுதல்பற்றி, "யசோதைக்கு முத்து" என்றார். அம்பைக்குறிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய "ஏ" என்ற பெயர்ச்சொல், "ஐ" என்று இரண்டனுருபை யேற்கும்போது "ஏமுனிவ்விருமையும்" என்ற