படி வகரவுடம்படுமெய்பெற்று 'ஏவை' எனநின்றது. மணிநீலம் = நீலமணி: கருமணி, கருவிழி. இதுவும், அருமைபாராட்டப்படுதற்கு உவமம். 'இன்ப வளம்' எனவே, பேரின்ப மென்றாம்; வளம் - சிறப்பு. அஸுரர் என்ற வடசொல் - தேவர்கட்கு எதிரானவரென்றும் (சுரர் - தேவர்), பாற்கடலினின்று உண்டான சுரையைப் பானஞ்செய்யாதவரென்றும் (சுரை - மது), பகைவருயிரைக் கவர்பவரென்றும் (அஸு - உயிர்) காரணப்பொருள்படும். மா வைரம் - தவறாது அழிப்பவ னென்றபடி. வைரம்என்பது வையிரம் எனப்போலிவிகாரம்பெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு. மரகதம் - பச்சையிரத்தினம்; நிறமும் ஒளியும்பற்றி, 'மரகதம்' என்றார்: மரகதம்போன்ற எம்பெருமானை மரகத மென்றது, உவமையாகுபெயர். (92) | 93. | மரகதத்தைக்கடைந்தொப்பித்ததொத்தன வாழ்த்தினர்த | | நரகதத்தைத்தள்ளிவைகுந்தநல்கின நப்பின்னையாம் | | விரகதத்தைக்குவிடையேழ்தழுவின வேங்கடவன் | | குரகதத்தைப்பிளந்தான்றோள்களாகியகுன்றங்களே. | (இ - ள்.) குரகதத்தை பிளந்தான் - குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனை வாய்பிளந்தழித்தவனான, வேங்கடவன் - திருவேங்கடமுடையானுடைய, தோள்கள் ஆகிய - புயங்களாகிய, குன்றங்கள் - மலைகள் (மலைகள் போன்ற தோள்களானவை), - மரகதத்தை கடைந்து ஒப்பித்தது ஒத்தன - மரகதமென்னும் பச்சையிரத்தினத்தைக் கடைந்து ஒப்பனைசெய்தாற் போன்றன; வாழ்த்தினர்தம் - (தம்மை) வாழ்த்திய மெய்யடியார்களுடைய, நரக தத்தை - நரகத்துன்பங்களை, தள்ளி - ஒழித்து, வைகுந்தம் நல்கின - (அவர்கட்குப்) பரமபதத்தைக் கொடுத்தன; நப்பின்னை ஆம் - நப்பின்னைப்பிராட்டியாகிய, விரக தத்தைக்கு - ஆசைநோயால் தவிக்கப்பட்டவளான பெண்ணை மணஞ்செய்தற்பொருட்டு, விடை ஏழ் தழுவின - ஏழுஎருதுகளைத் தழுவி வலியடக்கின; (எ - று.) இது, புயவகுப்பு. நிறமும், ஒளியும், திரண்டுருண்டு நெய்ப்புடைமையும்பற்றி, 'மரகதத் தைக்கடைந் தொப்பித்த தொத்தன' என்றார். பின்னையென்பது - அவள் பெயர்; ந - சிறப்புப்பொருளுணர்த்துவதோர் இடைச்சொல் (உபசர்க்கம்): நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல; நம்பின்னையென்பதன் விகாரமுமாம். நற்பின்னை யென்பாரு முளர். விரஹதப்தா, வ்ருஷம் என்ற வடசொற்கள் - விரகதத்தை, விடை என்று விகாரப்பட்டன. விரகம் - காதல் நோயையுடைய, தத்தைக்கு - கிளிபோன்ற (இன்மொழிபேசுகின்ற) பெண்ணுக்கு என்று உரைப்பாரு முளர். கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ்செய்து கொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற ஏழெருதுகளையும் ஏழு திருவுருக்கொண்டுசென்று வலியடக்கித் தழுவினதற்கு முன்னமே கண்ணபிரான்பக்கல் காதல்கொண்டிருந்தமை தோன்ற, 'நப்பின்னையாம் விரக தத்தைக்கு விடையேழ்தழுவின' என்றார். |