பக்கம் எண் :

616அழகரந்தாதி

வாளமாமுனிகள் வியாக்கியாநவாக்கியம் உணரத்தக்கது.) 'செந்தேன்துளி த்துமுருகவிழ்' என்ற அடைமொழி, அம்மலைச்சோலைகளிலுள்ள மலர்களின் செழுமையையும் சிறப்பையும் விளக்கும். முகுந்தன் என்ற வடமொழி - முத்தியின்பத்தையும், இவ்வுலகவின்பத்தையும் தருபவன் என்று பொருள்பெறும்; மு - முக்தி, கு - பூமி. முகுந்தற்கு என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு முகுந்தனது என்றலு மொன்று.

இருதாள் - உபய பாதம். இரு கவின் தாள் - இயற்கையழகு, அணிகல மணிவதனாலாகுஞ் செயற்கையழகு என்னும் இருவகையழகையு முடைய திருவடி யெனினும் அமையும். சூடும் என்ற வினைச்சொல்லின் ஆற்றலால், அந்தாதி பாமாலை யெனக் கொள்க. ஈரைம்பது - பண்புத்தொகை; இது - ஆகுபெயராய், அத்துணைச்செய்யுளின்மேல்நின்றது. பாடுவோனை யுணர்த்தும் 'கவி' என்ற வடசொல் - ஈற்றடியில், கருத்தாவாகுபெயராய், அவனாற் பாடப்பட்ட பாடலின்மேல் நின்றது. ஒருகவிகற்கினும், உம் - இழிவுசிறப்பு: ஒன்று என்னும் எண்ணின் சிறுமை பற்றியது. ஞானமென்றது - கல்வியறிவோடு, வீடுபயக்குமுணர்வாகிய தத்துவஞானத்தையுங் குறித்தது; "ஞானமும் புகழு முண்டாம், வீடியல்வழியதாக்கும்" என்றவிடத்துப் போல. "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாராநெறி" என்றபடி கல்விக்குப் பயன் ஞானமும் அதன் பயன் வீடு மாதலால், அக் காரணகாரியமுறைமை தோன்ற, "கற்கின் ஞானமும் வீடும் உதவிடும்" என்றார். ஜ்ஞாநம் - வடசொல். ஜ்ஞாநமாவது, முத்தியுணர்வு; மற்றையறிவு, விஜ்ஞாந மெனப்படும்: இவ்வேறுபாடு, வடநூலிற் கண்டது. வீடு - இருவினைப்பாசபந்தத்தை விட்டு அடையும் இடம்; "முக்தி" என்ற வடசொல்லின் பொருள்கொண்ட பெயர். உதவிடும், "இடு" என்ற துணைவினை - துணிவு உணர்த்தும்.

இக்கவி அபியுக்தரி லொருவர் செய்த தென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் எனப்படும். (நூலினுள் அடங்காது தனியே பாயிர மாய்நிற்றல்பற்றியது, அப்பெயர்; "அன்" விகுதி - உயர்வுப்பொருளது.)

காப்பு.

காப்பு - காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்குநேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தைமுடிக்கவல்ல தலைமைப்பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. இக்காப்புச்செய்யுள், ஆழ்வார்கள் பன்னிருவருட் பிரதானரான நம்மாழ்வாரைப் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், விஷ்ணு பக்தர்களிற்சிறந்த ஆழ்வாரைக் குறித்த தாதலால், வழிபடுகடவுள்வணக்க மாம். தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி அக்கடவு ளின் அடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின்பாற் படுமென அறிக. ஆழ்வார் திருமாலின் அவதார மாதலாலும், அவரை வணங்கு