கருத்தாப்பொருள்விகுதி: இனி, தொங்கல் என்பதைத் தொழிலாகு பெயரெனினும் இழுக்காது. தாளிணை தலைக்கொள்வன் என இயையும். சங்கத்து அழகர் என்பதற்கு - இடத்திருக்கையிலே ஸ்ரீபாஞ்சஜந்யமென்னுஞ் சங்கத்தை யேந்திய அழக ரெனினும் அமையும்; "அதிர்குரற் சங்கத்தழகர்" என்ற திருவாய்மொழியையும், ஸ்ரீபாஞ்சஜந்யத்தைத் திருக்கையிலேயுடையராய் அச்சேர்த்தியழகாலே அதுதன்னையே தமக்குத்திருநாமமாகவுடையவர்'என்றஅதன் வியக்கியாநத்தையும், “சங்கத்தமிழகரென்றே திருநாமம்” என்ற அதன் அரும்பதவுரையையுங் காண்க: இப்பொருளில், சங்கம் - ஸங்கமென்ற வடசொல்லின் திரிபு. நடாந்த - நடந்த என்பதன் விகாரம். தலைக்கொள்வன் என்பதில், 'அன்' விகுதி - தன்மையொருமைக்கு வந்தது. தலை - தலைமையான உறுப்பு; உத்தமஅங்கம். கைங்கரியசித்திக்குததிருமாலிருஞ்சோலைமலையை ஆசிரயிக்கவேணுமென்று தமது நெஞ்சத்துக்கும் உலகத்தார்க்கும் உபதேசமாக "கிளரொளியிளமை" என்ற தொடக்கத்துத் திருவாய்மொழிப்பதிகம் அருளிச்செய்த நம்மாழ்வாருடைய திருவடிகள் அவ்வழகர்விஷயமாக அந்தாதிபாடுதற்குக் காப்பாகக் கொள்ள உரியனவாதல் காண்க. ஆயிரத்தந்தாதி பாடியவரது திருவருள் நூற்றந்தாதியை நடத்தத் தட்டில்லையன்றோ. இங்ஙனம் வணங்கியதனால், தொடங்கிய தொழில் இனிதுமுடியுமென்பது கருத்து. நூல். | 1. | நீராழிவண்ணனைப்பாலாழிநாதனை நின்மலனைச் | | சீராழியங்கைத்திருமகள்கேள்வனைத் தெய்வப்புள்ளூர் | | கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ | | னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. | (இ - ள்.) நெஞ்சமே - (எனது) மனமே! - நீர் ஆழி வண்ணனை - நீர் மயமான கடல்போலும் (கரிய) திருநிறமுடையவனும், பால் ஆழி நாதனை - திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருக்கிற தலைவனும், நின்மலனை - குற்றமற்றவனும், சீர் ஆழி அம் கை திருமகள் கேள்வனை - சிறந்தமோதிரங்களை (த்திருவிரல்களில்) அணிந்த அழகிய கைகளையுடைய இலக்குமியின் கணவனும், தெய்வம் புள் ஊர் கூர் ஆழி மாயனை - தெய்வத் தன்மையையுடைய சிறந்தபறவையாகிய கருடனை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துகிறவனும் கூரிய (சுதர்சநமென்னுஞ்) சக்கராயுதத்தை (வலக்கையில்) ஏந்தியவனும் விசித்திரசக்தியை யுடையவனும், கொற்றம் வெய்யோன் ஓர் ஆழி தேர் மறைத்தானை - வெற்றியையுடைய சூரியனது ஒற்றைச்சக்கரத்தையுடைய தேரை (மகாபாரதயுத்தத்தில்) மறைத்திட்டவனுமான, மால் அலங்காரனை - பெருமைபொருந்திய அழகனை, எஞ்ஞான்றும் உரை - எப்பொழுதும் துதி செய்வாய்; (எ - று.) |