பக்கம் எண் :

622அழகரந்தாதி

எனதுஐம்பொறிகளும் உன்னிடத்தேயன்றிப் பிறவிடங்களில் அனுபவிக்கிற (விஷயங்களாகிற) ஆஹாரத்தை நீக்கியருளவேண்டும்; இதுவே என் விண்ணப்பம் - அடியேன் செய்யும் விஜ்ஞாபநம் இதுதான்; (எ - று.)

நம்மாழ்வார் தமது பிரதமப்பிரபந்தமான திருவிருத்தத்தின் தொடக்கத்தில் "பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும், இந்நின்றநீர்மையினியாமுறாமையுயிரளிப்பான், எந்நின்றயோனியுமாய்ப்பிறந் தாயிமையோர் தலைவா, மெய்ந்நின்றுகேட்டருளாய் அடியேன்செய்யும் விண்ணப்பமே" என்றாற்போலவும், திருவரங்கத்தமுதனார் தாம் இயற்றுகின்ற இராமாநுசநூற்றந்தாதியின் பாயிரமாக "சொல்லின் தொகை கொண்டுனதடிப்போதுக்குத்தொண்டுசெய்யும், நல்லன்ப ரேத்து முன்நாமமெல்லாம் என்றன்னாவினுள்ளே, அல்லும்பகலுமமரும்படிநல்கு அறுசமயம், வெல்லும் பரமவிராமாநுசவிதென்விண்ணப்பமே" என்றாற்போலவும் இந்நூலாசிரியர் பிரபந்தத்தொடக்கத்தில் தமதுஉள்ளக்கொள்கையை இங்ஙனம் எம்பெருமானை விளித்து அவன்சந்நிதியில் விஞ்ஞாபித்தனர். "வா யவனைஅல்லது வாழ்த்தாதுகை யுலகந், தாயவனையல்லது தாந்தொழா - பேய்முலைநஞ்சு, ஊணாகவுண்டானுருவொடுபேரல்லால், காணா கண் கேளா செவி," "கேசவனையே செவிகள்கேட்க திருவரங்கத், தீசனையே சென்னியிறைஞ்சிடுக - நேசமுடன், கண்ணனையே காண்க விருகண் ணிணர்கொள்காயாம்பூ, வண்ணனையேவாழ்த்துகவென்வாய்" என்றபடி மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சஇந்திரியங்களுள் கண் எம்பெருமானையே தரிசிப்பதும், செவி அப்பெருமானது வைபவங்களையே கேட்பதும், வாய் அவனையே துதிப்பதும், மூக்கு அவன்சாத்திய திருத்துழாயின் திவ்வியபரிமளத்தையே மோப்பதும், கைகால் தலை முதலிய உறுப்புக்களையுடைய மெய் அவனைத்தொழுதல் வலஞ்செய்தல் வணங்குதல் முதலியன செய்வதுமாக இங்ஙனம் எல்லாப்பொறிகளும் பகவத்விஷயத்தையே தாம்தாம் நுகரும்பொருளாகக் கொண்டு ஈடேறவேண்டு மாதலால், "கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியுமைம் புலனும், ஒண்டொடிகண்ணே யுள" என்றவாறு சிற்றின்பவிருப்பத்தால் விஷயாந்தரங்களிற்சென்று அழியாதபடி அருள்புரியவேண்டுமென்று பிரார்த்தித்தவாறாம். "உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங், கண்ணனெம்பெருமா னென்றென்றே," "வாஸுதேவஸ் ஸர்வம்" என்றபடி தாரகபோஷகபோக்யாதிகளெல்லாம் நீயேயாம்படி அருள்புரியவேண்டுமென்க.

உரைமாற்றம் - எதிர்காலவினைத்தொகை. இரை - உணவு; இங்கு, நுகரப்படும்பொரு ளென்றமாத்திரமாய் நின்றது; சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது; வாய்க்குஉரிய விஷயம் ஐம்பொறிகளுக்குமுரிய விஷயங்களை உணர்த்துதல் காண்க. விண்ணப்பம் - விஜ்ஞாபந மென்ற வடசொல்லின் சிதைவு. மாற்று - பொன்னின் தரம். பொன் - இங்கு, கருவி யாகுபெயராய், பொற்பட்டாடையைக் குறித்தது. இலங்கை - லங்கா என்ற வடசொல்லின் விகாரம்; கடல்சூழ்ந்த தீவு; இது, தென்கடலினிடையேயுள்ளது. இலங்கைவரை மாற்றலரைச் செற்றது, ஸ்ரீராமாவதாரத்தில்,