பக்கம் எண் :

அழகரந்தாதி623

வரைமாற்றலர் - உவமைத்தொகை. "இலங்கை வரை மாற்றலர்" என்பதற்கு - திரிகூட பருவதத்தின்மேலுள்ள இலங்கையில் வசிக்கிற பகைவர்க ளென்று உரைப்பாரு முளர். இனி, (தான் திருவவதரித்தஇடமான திருவயோத்தி முதல் தென்கடலிடைத்தீவான) இலங்காபுரியளவும் பகைவர்களை அழித்தவனே யென்று உரைப்பினும் அமையும்; என்றது, இளமையில் தாடகையையும் சுபாகு முதலியோரையும், பின்பு தண்டகாரணியத்தில் விராதன் கரதூஷணாதியர் கவந்தன் என்னும் அரக்கர்களையும் அழித்ததையும் உட்கொண்டதாம். மாற்றலர் - மனத்தைமாற்றுதலையுடையவரெனப் பகைவர்க்குக் காரணக்குறி. மாணிக்கம் - மாணிக்யம் என்ற வடசொல்லின் விகாரம். மாணிக்கம் இயல்பிற்செந்நிறமுடையதாதலால், "கருமாணிக்கம்" என்றது, இல்பொருளுவமையாகக் கற்பித்துக்கூறிய தென்க.

(2)

3.மாணிக்கனகம்புரைமேனிமாலுக்கு வார்சடையோன்
பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப் பச்சைத்துழா
யாணிக்கனகமுடியலங்காரனுக் கண்டமெல்லாம்
பேணிக் கனகனுக்குப் பித்தரானவர்பித்தரன்றே.

(இ - ள்.) மாணிக்க நகம் - மாணிக்கமயமானதொரு மலையை, புரை ஒத்த, மேனி - திருமேனியையுடைய, மாலுக்கு - திருமாலும், - வார் சடையோன் - நீண்ட (கபர்த்தமென்னுஞ்) சடையை யுடையவனான சிவபிரானது, பாணி - கையிலே ஒட்டிக்கொண்ட, கனகம் - பெரிய (அல்லது பாரமான) (பிரம) கபாலத்தைக்கொண்டு இரக்கிற, பலி - பிச்சையை, ஒழித்தானுக்கு - நீக்கியருளியவனும், - அண்டம் எல்லாம் பேணிக்கு - அண்டகோளங்களெல்லாவற்றையும் விரும்பிப்பாதுகாப்பவனும், - அனகனுக்கு - தோஷமில்லாதவனுமாகிய, - பச்சை துழாய் - பசுமையான திருத்துழாய் மாலையைத் தரித்த, ஆணி கனகம் முடி அலங்காரனுக்கு - ஆணிப்பொன்னாலாகிய கிரீடத்தையுடைய அழகப்பிரான்விஷயமாக, பித்தர்ஆனவர் - பக்திப் பித்துக்கொண்டவர், பித்தர்அன்றே - (மற்றைவிஷயங்களிற்) காதற்பித்துக்கொண்டவர்போல இகழத்தக்கவ ரல்லர்; (எ - று.) - ஈற்றுஏகாரம் - தேற்றம்.

"மொய்த்துக்கண்பனிசோரமெய்கள்சிலிர்ப்பவேங்கியிளைத்துநின், றெய்த்துக்கும்பிடுநட்ட மிட்டெழுந்தாடிப்பாடியிறைஞ்சியென், னத்தனச்சன ரங்கனுக்கடியார்களாகியவருக்கே, பித்தராமவர்பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே" என்ற பெருமாள்திருமொழிப்பாசுரத்தை அடியொற்றியது இச்செய்யுள். நிலையற்றதும் இகழத்தக்கதுமான சிற்றின்பத்தி லாசை மிகுதியால் பெண் மண் பொன் முதலிய விஷயாந்தரங்களிற் பித்தேறித் திரிபவராய்ப் பகவத்பக்திசெய்யாதவரனைவரும் பித்தரேயன்றி, உரியவிஷயமான எம்பெருமான்திறத்தில் பத்திகாரியமான பித்தேறித் திரியும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பித்தரல்லர் என்பது இதன்கருத்து. இந்தப் பக்திப்பித்து, நற்கதிக்குக்காரணமான ஞானகாரியம்; மற்றைய காதற்பித்துக்களோ, தீக்கதிகளிற்புகுத்தும் அஜ்ஞாநகாரியம் என்ற வேறுபாட்டை உணர்க; என்றது, தாம் இப்பத்திப்பித்துக்கொள்ளவிரும்பிக் கூறியவாறாம்.