அந்தாதித்தொடையாக அமைந்த இந்நூலிலே முந்தினசெய்யுளின் இறுதிச்சொல்லான மாணிக்கத்துக்கு அடைமொழியாய்நின்ற கருமையை இச்செய்யுளின் முதற்சொல்லான மாணிக்கத்துக்கும் அடைமொழியாக வருவித்துஇயைத்து, கரியதொருமாணிக்கமயமான மலைபோல நிறங்கொண்டு விளங்குந் திருமேனியையுடைய திருமா லென்க; "கருமாணிக்கக்குன்றத்துத்தாமரைபோல், திருமார்வுகால்கண்கைசெவ்வாயுந்தியானே," "கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக்காடுகள்போல், திருமார்வு வாய் கண் கை யுந்தி காலுடை யாடைகள் செய்யபிரான்" என்றார் திருவாய்மொழியிலும். இனி, நிறத்துக்கன்றி ஒளிக்கும் பெறலருமைக்கும் மாணிக்க மலையை உவமை கூறியதாகக் கொண்டு உரைத்தலும் அமையும்; "திகழும் மணிக்குன்றமே யொத்து நின்றான்" என்பது திருவாய்மொழி. மால் - பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன். சிவபெருமான் இரத்தலைத் திருமால் ஒழித்த வரலாற்றுமுகத்தால், எம்பெருமானுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு. நகம் என்ற வடமொழி, நடவாதது என்று உறுப்புப்பொருள்பெறும்; அசலம் என்றபடி. புரை - உவமவுருபு, ஆணிப்பொன் - மாற்றறிதற்குக்கொள்ளும் உயர்தரப்பொன்; இதற்குமேலே மாற்றில்லை யென்னும்படியான சிறந்தபொன் என்றும் உரைப்பர். மயிர்முடியப்படுவதென்னுங் காரணத்தால் தலையையுணர்த்துகிற முடியென்ற பெயர், இங்கு இடவாகுபெயராய், அதிலணியுங் கிரீடத்தைக் குறித்தது. அண்டம் - உலகவுருண்டை. காத்தற்றொழிற்கடவுளாதலால், "அண்டமெல்லாம்பேணி" என்றார். பேணி என்ற பெயரில், இ - கருத்தாப்பொருள்விகுதி. பேணுதல் - மிக்கஅன்போடுகுறிக்கொண்டுபாதுகாத்தல். இனி, அண்டங்களையெல்லாம் விரும்பியமுது செய்தவ னென்றலுமொன்று; பிரளயகாலத்திலே வயிற்றில் வைத்துக் காத்தவ னென்க. அநகன் - ந + அக; வடமொழிப்புணர்ச்சி; ந - எதிர்மறை குறிக்கும்; அகம் - குற்றம். வேறு இல்லை உண்டு என்பனபோல, அன்று என்பதும் இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாகவழங்குதலை, இலக்கியங்களிற் காணலாம்; இது, புதியனபுகுதல்; ஆகவே, "பித்தரானவர் பித்தரன்று" என்ற முடிபு வழுவும் வழுவமைதியு மாகாது வழாநிலையின்பாற்படு மென்க. பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும், ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமைபற்றி, திரிபு யமகம் சிலேடை, இவற்றில் நகர னகரங்களை அபேதமாக்கொண்டு அமைத்தல் மரபாதலால், 'மாணிக்கநகம்' என்னவேண்டியவிடத்து 'மாணிக்கனகம்' எனப்பட்டது. (இங்ஙனம் திரிபுநயத்தின்பொருட்டு வரிவடிவின்வேறுபாடு கருதாது ஒலிவடிவொற்றுமையால் ஒன்றுக்குஒன்றாகக் கொள்ளப்பட்ட எழுத்துக்கள்;இப்பதிப்பிலே தடித்தஎழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.) மேல் 24, 46,54, 55, 88, 89 - ஆஞ் செய்யுள்களிலும் இது காண்க. |