(இ - ள்.) தொல் புவிக்கு வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு - பழமையான நிலவுலகத்திலே யுள்ளவர்களுக்கு வேண்டும் வரங்களைக் கொடுத்தருளுதற்பொருட்டுத் திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளி நின்றவராகிய, அலங்காரர்க்கு - அழகருக்கு, இங்கு - இவ்விடத்தில் (இம்மையில்), நிரந்தரம் ஆய் - இடைவிடாமல் (எப்பொழுதும்), என் மனத்தினுள்ளே ஆள் பட்டு நின்ற பின் - என்மனப்பூர்வமாக (யான்) அடிமைப்பட்டுநின்ற பின்பு, - புரந்தரன் ஆம் என பூபதி ஆகி புகர் முகம் மா துரந்து அரசு ஆளில் என் '(இவன்) இந்திரனேயாவன்' என்று (அனைவருஞ்) சொல்லும் படி அரசனாகிச் செம்புள்ளிகளுள்ள முகத்தையுடைய பட்டத்துயானையை ஏறிநடத்தி அரசாண்டா லென்ன? நல்குரவு ஆகில் என் - வறுமைப்பட்டாலென்ன? (எ - று.) "இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் எண்ணிறந்த, துன்பந்தரு நிரயம் பல சூழிலென் தொல்லுலகில், மன்பல்லுயிர்கட்கிறையவன் மாயனெனமொழிந்த, அன்பனனகனிராமாநுசனென்னையாண்டனனே" என்ற பாசுரத்தை ஒருசார் அடியொற்றியது இச்செய்யுள். அழகர்க்கு யான் அடிமைப்பட்டபின்பு எனக்குச் செல்வமும் வறுமையும் இவ்வுலக வின்பமும் துன்பமும் சமமேயாம்; இவையெவற்றையும் ஒருபொருளாகக் கருதேன் என்று தமது உள்ளக்கிடையின் துணிவை வெளியிட்டவாறாம். புரந்தரன் என்ற வடமொழிப்பெயர், (பகைவர்களுடைய) நகரங்களை அல்லது உடல்களை அழிப்பவனென்று காரணப்பொருள்பெறும்; புரம் - ஊரும், உடலும். பூபதி - பூமிக்குத் தலைவன்; நிலவுலகத்தையாள்பவன்; வடசொல். யானைக்கு முகத்திற் செம்புள்ளிக ளிருத்தல், உத்தமவிலக்கணம்; "தீயுமிழ்சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்" என்றார் பிறரும். 'மா' என்ற விலங்கின் பொதுப்பெயர். 'புகர்முகம்' என்ற அடைமொழியினால், யானையை யுணர்த்திற்று. நல்குரவு - நுகரப்படும்பொருளொன்று மில்லாமை; நல்கூர் என்ற பகுதியின் தொழிற்பெயர். புவிஎன்ற சொல், வடமொழியில் பூ என்ற பெயரின் ஏழாம்வேற்றுமைவிரி யாயினும், தமிழில் வரும்போது பெயர்மாத்திரமாய் வேற்றுமையுருபுகளை யேற்றற்கு இடமாம். (5) | 6. | நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய் | | | சென்றபிராயம்வம்பேசென்றதாற் றிருமங்கைகொங்கை | | | துன்றபிராமனைச் சுந்தரத்தோளனைத் தோளின்மல்லைக் | | | கொன்றபிரானை யடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. | (இ - ள்.) நெஞ்சமே - மனமே! - சென்ற பிராயம் வம்பே சென்றது - (இதுவரை) கழிந்த ஆயுள் (முழுவதும்) வீணேபோய்விட்டது; (இனியாயினும்), நின்ற பிராணன் கழலும் முன்னே - (உடலில்) நின்ற உயிர் (அவ்வுடலைவிட்டு) நீங்குதற்கு முன்னே, - திருமங்கை கொங்கை துன்று அபிராமனை - திருமகளுடைய தனங்களை நெருங்கித் தழுவுகிற அழகனும், சுந்தரம் தோளனை - அழகிய திருத்தோள்களையுடையவனும், தோளின் மல்லை கொ |