ப்பிறப்பின்றி நித்தியமான முத்தி பெறக்கடவராகி ஜீவந்முக்தி நிலையில் நின்று பிரமாநந்தமனுபவிக்கின்ற பாகவதர்க்குச் சிறிதும் நிகராகா ரென்க. "பாதக ரத்தனைபேரும்" என்றது, இரணியனது பரிவாரங்களான மிகப்பல அசுரர்களை. இரணியனுக்குப்பரிந்து நரசிங்கமூர்த்தியை எதிர்த்ததனால், இவர்களும் அப்பெருமானாற் கொல்லப்பட்டனர்; இதனை, "அறியி னரங்கர் முன்னாளரியாகிய வப்பொழுது, கொறியி னவுணர்தம் வெள்ளங்கள் கோடியுங் கொன்றதிலோ, தறியின்வயிற்றிற் றகுவனெஞ்சுஞ் சரபத்துடலும், நெறியின் வகிர்ந்தபினன்றோ தணிந்தது நீள்சினமே" என்ற திருவரங்கத்து மாலையினாலும் உணர்க. இவர்களும் இரணியனோ டொப்ப எம்பெருமான்பக்கல் பகைமையுடைமையால், "பாதகர்" எனப்பட்டனர். இப்படி தன்பக்கல் துவேஷங்கொண்ட அசுரர்களையெல்லாம் அப்பெருமான் அழிக்கின்றபோதே, தனக்கு அடிமைபூண்ட பிரகலாதன் பக்கல் அநுக்கிரகமுடையனா யிருந்தன னாதலால், 'பாதகரத்தனைபேருங் கனகனும் பல்நகத்தாலே தகரத் தனையற்கரு ளாளி' என்றார்; அத்தன்மையை, "தாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே, சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவால்" என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் நன்கு விளக்குவர். இரணியன்முதலிய அசுரர்கள் பலரைக்கொன்ற நரசிங்கமூர்த்தியின் உக்கிரத்தைக்கண்டு அஞ்சித் திருமகளும் அருகிற்செல்லமாட்டாளாக, பிரமன்முதலிய தேவர்கள்பலரும் பலவாறு துதிக்கவும் அச்சீற்றம் அடங்காதிருந்த அந்நிலையிலே, பிரகலாதன்செய்த துதிமொழிக்குச் சிங்கப்பிரான் திருவுள்ளமுகந்து அவன்முதுகைத்தடவி "நீ விரும்பிய வரத்தைக் கொடுப்பேன்; வேண்டுக" என்று சொன்னதற்கு, அந்தப் பரமபாகவதன் 'நின்னை வழிபடும் அன்பேயன்றி யான் வேண்டுவதொரு வரமும் உண்டோ!' என்றுசொல்லித் தொழுது பலவாறுதுதித்து 'இங்ஙனம் உற்ற சீற்றந்தணிந்து திருவுள்ள முவந்தருளவேணும்' என்று பிரார்த்தித்தவளவிலே, அப்பெருமான் சினந்தணிந்தன னென்ற விவரத்தைப் புராணங்களிற் காணலாம். தகர என்ற செயவெனெச்சம் - உடனிகழ்ச்சிப் பொருளதாய், நிகழ்காலங் காட்டும். இரணியனென்ற பெயர் பொன்னிறமானவனென்று பொருள்படுதலால், அதன் பரியாயநாமமாக, "கனகன்" என்றார். இரணியம், கநகம் என்பன - பொன்னின் பெயர்கள். திருவேங்கடத்தந்தாதியில், "செம்பொற்றானவன்" என்றதும் இத்தன்மையதே. "பல் நகத்தாலே" என்பதற்கு - பற்களினாலும் நகங்களினாலும் என்று உரைப்பாரு முளர். தநயன் என்ற வடசொல்லின் விகாரமாகிய தனயன் என்றது, திரிபுநயத்துக்காக, தனையன் என இடைப்போலிபெற்றது. ஆளி - சிங்கம். 'எட்டெழுத்துள் ஓது அகரம்' என்றது, அப் பெரியதிருமந்திரத்தின் முதலிலுள்ள பிரணவத்திலடங்கிய அகாரத்தை. "அகாரார்த்தோவிஷ்ணு:" என்றபடி அதன்பொருள் திருமாலாதலால், 'அகரத்தன்' என்றார். 'அகரம் எல்லாச்சொற்களுக்கும் மூலமாதலாலும், பிரஹ்மம் எல்லாப்பொருள்களுக் |