பக்கம் எண் :

அழகரந்தாதி739

கும் மூலமாதலாலும், 'அ' என்று பரப்பிரஹ்மத்துக்குப் பெயர்' என வாமநபுராணம் கூறும். அகரம், எல்லா வெழுத்துக்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும்; கடவுள் எல்லாச் சராசரப் பொருள்களிலுங் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்பன்: அகரம், எல்லா வெழுத்துக்கும் முதல்; பகவான், எல்லாவுலகிற்கும் முதல்: அகரம், அவிகாரமான நாதம்; பகவான், விகாரமில்லாத இயற்கைப்பொருள்: இவ்வாறு பல கண்டுகொள்க. ஸ்ரீ கீதையிலே கண்ணன் 'எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே' என்று அருளிச்செய்ததும் உணர்க. அகரம் என்பதில், கரம் - சாரியை.

நவநீதகரம் - வடமொழித்தொடர். நவநீதமென்ற சொல் - புதியதயிரிலிருந்து எடுக்கப்பட்டதென்று காரணப்பொருள்பெறும். தேவரும், உம் - உயர்வுசிறப்பு. இதனால், பிறர் நேரல்லரென்பது தானே போதரும்.

(95)

96.அல்லலங்காரையுஞ்சேர்விக்குமைம்புலவாசையென்றும்
பல்லலங்காநைந்துகோலூன்றியும்பற்றறாதுகண்டாய்
மல்லலங்காரிகையார்மருடீர்ந்துவணங்குநெஞ்சே
தொல்லலங்காரனைத் தென்றிருமாலிருஞ்சோலையிலே.

(இ - ள்.) நெஞ்சே - மனமே! - ஆரையும் அல்லல் சேர்விக்கும் - எவரையுந் துன்பமடைவிக்கின்ற, ஐம் புலம் ஆசை - ஐந்துபுலன்களிற் செல்லுகின்ற ஆசையானது, என்றும் - எந்நாளும், பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் - பற்கள் அசையப்பெற்று உடல்தளர்ந்து (நடக்க வலியில்லாமற்) கோலையூன்றும்படியானாலும், பற்று அறாது - தொடர்ச்சி நீங்காது; (ஆதலால்), மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து - அழகுவளமுள்ள மாதர்கள் பக்க லுண்டாகிற மோகம் நீங்கி, தொல் அலங்காரனை தென்திருமாலிருஞ் சோலையிலே வணங்கு - அநாதியான அழகனை அழகிய திருமாலிருஞ் சோலைமலையிலே வணங்குவாய்; (எ - று.) - கண்டாய் - தேற்றம். அங்கு - அசை; அவ்விடத்தி லெனக்கொண்டு, மறுமையி லென்றலு மொன்று.

ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களை யனுபவிப்பதி லுண்டாகின்ற ஆசையானது, மிக்ககிழத்தனத்திலுமுட்பட எப்பொழுதும் நீங்காது; ஆதலால், அதற்கு முடிவில்லை: ஆகவே, அதில் விருப்பம் வைத்துப் பெண்ணாசை கொண்டு மயங்குதலின்றித் திருமாலிருஞ்சோலையழகனை வணங்கி உய்யும் வழியை நாடுவாய் என்று, தம்நெஞ்சத்துக்கு நல்லறிவுணர்த்தியவாறாம்.

"கருது நெஞ்சே" என்னாது "வணங்குநெஞ்சே" என மெய்யின்வினையை மனத்தின்மேலேற்றிக் கூறியது, புறக்கரணமாகிய அம்மெய்யின் வணக்கத்துக்கு அந்தக்கரணமாகிய மனத்தின் உடன்பாடு இன்றியமையாதாதலால். இதனை, முதற்செய்யுளில் "உரைநெஞ்சமே" என்றதனோடு ஒப்பிடுக. இத்தன்மைபற்றியே, பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் மனமே காரண மென்ப. இது, ஒருவகை உபசாரவழக்கு. அன்றி, தியானமென்னும் மனவணக்கத்தைக் குறித்ததுமாம்.