பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி863

வீழ்ந்து கிடந்ததுபோலக் (கிடக்கும்படி), (இராமாவதாரத்தில்) துணிந்து வீழ்த்தான் - வெட்டித்தள்ளிய திருமாலினது, திருப்பிருதிக்கு - திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்திற்கு, செல் - நீ சென்று சேர்வாயாக; (எ - று.)

திருமாலினது திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்தைப் போய்ச்சேர்ந்தாயாயின், உனது சகலவிரோதிகளும் போய் நற்கதிபெறுவது திண்ணமென்பது, கருத்து. இராமபிரான் கவந்தனது வலத்தோளையும், லஷ்மணன் அவனது இடத்தோளையும் வெட்டித் தள்ளியதாகக் ஸ்ரீராமாயணத்திற் கூறியிருக்க, இங்கு இவ்வாசிரியர் கவந்தனது இருதோள்களையும் இராமபிரானே வெட்டித்தள்ளியதாக கூறியது - "ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:" என்றபடி லஷ்மணனை இராமபிரானது வலக்கையாகக் கூறியிருப்பதுகொண்டு அவ்விலக்குமணனது செயலையும் இராமபிரானது செயலாகவே கொண்டதனாலாகுமென்க. இது, ஒருவகை உபசாரவழக்கின்பாற்படுமென்னலாம். கவந்தனதுதோள்கள் யோசனைதூரம் நீண்டிருந்தன வாதலால் அவை வெட்டப்பட்டுக் கீழ்வீழ்ந்துகிடந்ததற்கு - இருபொருப்புக்கள் கீழ்வீழ்ந்திருத்தலை உவமை கூறினார். தோட்கிழங்கு - புஜமூலம்.

(103)

9. திருவடமதுரை.

செல்வமுயிருடம்புசேரவுரித்தாக்கி
வல்வினையினீங்குமினோ மாந்தர்கா - டொல்லை
வடமதுரையான்கழலேவாய்த்ததஞ்சமென்று
திடமதுரைசெய்தான்றிறத்து.

(இ - ள்.) மாந்தர்காள் - மனிதர்களே! - (அனைவர்க்கும்), "கழலே - எனது திருவடிகள்தாம், வாய்த்த தஞ்சம் - பொருந்திய ரக்ஷகமாகும்,' என்று -, திடம்அது உரைசெய்தான் - உறுதியாக உபதேசித்தவனும், தொல்லை வடமதுரையான் திறத்து - பழமையான (முதற்கடவுளான) வடமதுரையிற் பிறந்தவனுமாகிய பெருமானிடத்தில், - செல்வம் - (நுமது) செல்வங்களையும், உயிர் - பிராணனையும், உடம்பு - உடம்பையும், சேர - ஒருசேர, உரித்து ஆக்கி - உரியனவாகச் சமர்ப்பித்து, வல் வினையின் நீங்குமின் - வலிய இருவினைத் தொல்லைகளினின்று நீங்குங்கள்; (எ - று.)

கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி முதலிய உபாயங்களையெல்லாம் ஒழித்துத் தனது திருவடிகளையே தஞ்சமாகப்பற்றும்படி உபதேசித்த ஸ்ரீகிருஷ்ண பகவான்திறத்தில் உமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர அர்ப்பணம்பண்ணி, அப்பிரானருளால் இருவினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வுபெறுவீர்களென்று உலகத்தார்க்கு உபதேசித்தவாறு, "ஸர்வதர்மாந் பரித்யஜ்ய - மாமேகம்ஸரணம்வ்ரஜ" என்று அப்பிரான் சரமஸ்லோகத்தில் தன்னையே ரக்ஷகமாக அடையுமாறு கூறியிருக்கவும், ஸேஷபூதன் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால், 'கழலே வாய்த்ததஞ்சமென்று திடமது உரைசெய்தான்' என்றார். திடம் = த்ருடம்; அது - பகுதிப்பொருள்விகுதி. செல்வமுயிருடம்பு உரித்தாக்கி - பன்மையொருமை வழுவமைதி.