பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்877

(ததீயர்) பாட - பாகவதர்கள் பாடாநிற்கவும், - கருணை பொழி முகம் மதியம் - திருவருளைச் சொரிகின்ற பூர்ணசந்திரன்போன்ற திருமுகத்திலே, குறுவேர்வு ஆட - சிறிய வேர்வைநீர் தோன்றி அசையவும், கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட - கருங்குழற்கற்றையும் கத்தூரித்திருநாமமும் ஒருசேர அசையவும், - அருகு இருக்கும் தேவியர்கள் அது கொண்டாட - இருமருங்கிலுமுள்ள தேவிமார்கள் அந்தவைபவத்தைக் கண்டு கொண்டாடவும், - அணி அரங்கத்து எம்பெருமான் - அழகிய திருவரங்கநாதனே! ஊசல் ஆடிர் -;

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என நான்காம்.

(6)

7.வையமொருபொற்றகட்டுத்தகளியாக
        வார்கடலேநெய்யாகவதனுட்டேக்கி
வெய்யகதிர்விளக்காகச்செஞ்சொன்மாலை
        மெல்லடிக்கேசூட்டினான்மேன்மைபாடத்
துய்யமதிமண்டலத்தின்மறுவேயொப்பச்
        சோதிவிடுகத்தூரிதுலங்குநாமச்
செய்யதிருமுகத்தரங்கராடிரூசல்
        சீரங்கநாயகியோடாடிரூசல்.

(இ - ள்.) வையம் - நிலவுலகத்தையே, ஒரு பொன் தகடு தகளி ஆக - ஒப்பற்ற பொன்தகட்டினாற் செய்த அகலாகக்கொண்டு, வார் கடலே - நீண்ட சமுத்திரத்தையே, நெய் ஆக -, அதனுள் தேக்கி - அவ்வகலில் நிறைத்து, வெய்ய கதிர் - உஷ்ணகிரணனான சூரியனையே, விளக்கு ஆக - விளக்காகக்கொண்டு (இவ்வாறானபொருளைத் தெரிவிக்கின்ற பாடலைத் தொடங்கி), செஞ் சொல் மாலை - செவ்விய தமிழ்ச்சொற்களினாலாகிய பாமாலையை, மெல் அடிக்கே சூட்டினான் - மேன்மையான (தேவரீரது) திருவடிகளில் அணிந்தவராகிய பொய்கையாழ்வார் அருளிச்செய்த, மேன்மை - (தேவரீரது) மேன்மையைத் தெரிவிக்கின்ற திவ்யப்ரபந்தத்தை, பாட - (ததீயர்)எடுத்துப்பாடாநிற்க, - துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்ப - பரிசுத்தமாகிய சந்திரமண்டலத்திலுள்ள களங்கத்தைப் போல, சோதி விடு கத்தூரி நாமம் துலங்கு - ஒளிவிடுகின்ற கஸ்தூரிதிலகம் விளங்கப்பெற்ற, செய்ய திருமுகத்து - அழகிய திருமுகத்தையுடைய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ - று.)

முதலாழ்வார்மூவரும் திருக்கோவலூரில் ஓர்இடைகழியில் மழைக்காலத்து ஒருநாளிரவில் தங்கியிருக்கையில், எம்பெருமான் இருட்டில் அவர்களோடு தானும் ஒருவனாய் நின்று நெருக்க, அப்பொழுது பொய்கையாழ்வார் "வையந் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்யகதிரோன் விளக்காகச் செய்ய, சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை, யிடராழிநீங்குகவே யென்று" என்று முதல்திருவந்தாதிப் பிரபந்தத்தைத் தொடங்கி வெய்யகதிரினால் விளக்கேற்றின ரென்க.