பக்கம் எண் :

878சீரங்கநாயகரூசல்

கீழ்ச்செய்யுளில், 'சடகோபன்தமிழ்வேதம் ததியர்பாட' என்று கூறியதற்கு ஏற்ப, இச்செய்யுளிலும் 'ததீயர்' என்று வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது; மேலும் இங்ஙனமே கூறப்படும். இப்பொருளில், மேன்மை - மேன்மையான பிரபந்தத்திற்கு, இலக்கணை; இனி, பொய்கையாழ்வார் தேவரீரது மேன்மைகளைப் பாட என்றும், பொய்கையாழ்வாரது மேன்மையைத் ததீயர்பாட என்றும் கூறுவாரு முளர்; மேலும் இங்ஙனமே காண்க.

(7)

8.அன்பென்னுநன்பொருளோர்தகளியாக
        வார்வமேநெய்யாகவதனுட்டேக்கி
யின்புருகுசிந்தையிடுதிரியாஞானத்
        திலகுவிளக்கேற்றினானிசையைப்பாடப்
பொன்புரையும்புகழுறையூர்வல்லியாரும்
        புதுவைநகராண்டாளும்புடைசேர்ந்தாட
முன்பிலும்பின்பழகியநம்பெருமாடொல்லை
        மூவுலகுக்கும்பெருமாளாடிரூசல்.

(இ - ள்.) அன்பு என்னும் நல் பொருள் - அன்புஎன்கிற நல்ல பொருளையே, ஓர் தகளி ஆக - ஒரு அகலாகக் கொண்டு, ஆர்வமே - பக்தியையே, நெய் ஆக -, அதனுள் தேக்கி - அவ்வகலுள் நிறைத்து, இன்பு உருகு சிந்தை - ஆனந்தத்தினாலே உருகுகின்ற மனத்தையே, இடு திரி ஆ - அதிலிட்ட திரியாகக்கொண்டு, ஞானத்து இலகுவிளக்கு ஏற்றினான் - தத்துவஞானத்தினால் விளங்குகின்ற விளக்கை ஏற்றினவராகிய பூதத்தாழ்வாருடைய, இசையை - புகழ்பெற்ற திவ்யப்ரபந்தத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்கவும், - பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும் - பெரியபிராட்டியாரைப் போன்ற கீர்த்தியையுடைய திருவுறையூர்நாச்சியாரும், புதுவைநகர் ஆண்டாளும் - ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த ஆண்டாளும், புடை சேர்ந்து ஆட - தேவரீரது இருபக்கத்திலும் சேர்ந்து ஆடவும், - முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் - முற்பக்கத்திலும் பிற்பக்கம் அழகியவரான நம்பெருமாளே! தொல்லை மூவுலகுக்கும் பெருமாள் - பழமையான மூன்று லோகங்களுக்கும் நாயகரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

"அன்பே தகளியா வார்வமேநெய்யாக, இன்புருகுசிந்தையிடுதிரியா - நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு, ஞானத்தமிழ் புரிந்த நான்" என்பது, பூதத்தாழ்வார் அப்போது அருளிச்செய்த இரண்டாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

(8)

9.திருக்கண்டேன்பொன்மேனிகண்டேனென்ற
        திகழருக்கனணிநிறமுந்திகிரிசங்கு
மிருட்கொண்டகருங்கங்குலிடையேகோவ
        லிடைகழியிற்கண்டபிரானேற்றம்பாட