ஓருயிர் பிறப்பதுமுதல் இறக்குமளவும் அநுபவிக்கவேண்டியவை முழுவதையும் விதித்துப் பிரமன் எழுதியது விரியுமாதலால், அதனை 'நெட்டெழுத்து' என்றும்; யமன் தண்டனை விதித்தற்பொருட்டாக அவனது கணக்கனாகிய சித்திரகுப்தனென்பவன் ஓருயிர்செய்கின்ற பாவத்தைமாத்திரங் குறித்துக்கொள்வது பிரமனது எழுத்துப்போல அத்துணை விரியாதாகலின், அதனை 'குற்றெழுத்து' என்றுங் கூறினார். நம்மாழ்வார் வேதத்தின் சாரமாக அருளிச்செய்த திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் அவரது சீடரான மதுரகவியாழ்வார் பட்டோலைகொண்டன ரென்க. மதுரகவியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம், கண்ணிநுண்சிறுத்தாம்பு எனப்படும். இது பகவானது அமிசமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியது ஆதலாலும், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் புத்ரஸ்தாநீயராதலாலும், இப்பாசுரத்தைப் பாடுவதனால், ஸ்ரீரங்கநாதர் திருவுள்ளமுவப்பரென்க. "தேவுடைய மீனமாயாமையா யேனமா யரியாய்க் குறளாய், மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில், ...... அரங்கமே" என்ற பெரியாழ்வார் பாசுரத்தை அடியொற்றியன, இச்செய்யுளின் பின்னிரண்டடிகள். (16) | 17. | ஆரமுதினின்பமிகுசடகோபன்சொல் | | லாயிரமுந்தெரிந்தெடுத்தேயடியார்க்கோதி | | நாரதனுமனமுருகவிசைகள்பாடு | | நாதமுனிதிருநாமநலங்கள்பாடப் | | பாரதனிற்பாரதப்போர்முடியமூட்டிப் | | பகைவேந்தர்குலந்தொலையப்பார்த்தன்றெய்வத் | | தேரதனில்வருமரங்கராடிரூசல் | | சீரங்கநாயகியோடாடிரூசல். | (இ - ள்.) ஆர் அமுதின் - அருமையாகிய தேவாமிருதத்தைக்காட்டிலும், இன்பம்மிகு - இன்சுவைமிக்க, சடகோபன் சொல் ஆயிரமும் நம்மாழ்வார்திரு வாய்மலர்ந்தருளிய ஆயிரம்பாடல்களையும், தெரிந்து எடுத்து - கண்டுஎடுத்து, அடியார்க்கு ஓதி - பக்தர்களுக்கு (அவற்றை) உபதேசித்து, நாரதனும் மனம்உருக இசைகள் பாடும் - (இசைபாடுதலில்வல்ல) நாரதமுனிவனும் மனங்கரையும்படி தேவகானத்தாற்பாடுகின்ற, நாதமுனி - ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்துள்ள, திருநாமம் நலங்கள் - (எம்பெருமானது) திருநாம வைபவத்தைப்புலப்படுத்துகின்ற பாடல்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - பார் அதனில் - பூமியிலே, பாரதம் போர் முடிய மூட்டி - பாரதயுத்தத்தை (ப் பூமிபாரம்) தொலையும்படி மூள்வித்து, பகை வேந்தர் குலம் தொலைய - பகையரசர்களாகிய துரியோதனாதியரது வம்சம் அழியும்படி, (ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலே), பார்த்தன் தெய்வம் தேர்அதனில் வரும் - அருச்சுனனது (அக்கினியாற் கொடுக்கப்பட்டுத்) தெய்வத்தன்மையமைந்த தேரின்மீது ஏறிச் சாரத்தியஞ்செய்த, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் - சீரங்கநாயகியோடு ஊசல்ஆடிர் -; (எ - று.) |