பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்889

மான) வெற்றிப்பாடல்களைத் ததீயர்பாடாநிற்க என்று உரைப்பாரு முளர். நக்கன் = நக்நன்; திகம்பரன்.

(19)

20.அவத்தப்புன்சமயச்சொற்பொய்யைமெய்யென்
        றணிமிடறுபுழுத்தான்றன்னவையின்மேவிச்
சிவத்துக்குமேற்பதக்குண்டென்றுதீட்டுந்
        திருக்கூரவேதியர்கோன்செவ்விபாடப்
பவத்துக்கம்பிணிநீங்கநரகந்தூரப்
        பரமபதங்குடிமலியப்பள்ளிகொள்ளு
நவத்துப்புச்செங்கனிவாய்க்கரியமேனி
        நம்பெருமாளரங்கேசராடிரூசல்.

(இ - ள்.) அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை - பயனற்றதும் இழிந்ததுமாகிய சைவசமயத்தைச்சார்ந்த பொய்ச்சொற்களையெல்லாம், மெய் என்று - மெய்ப்பொருளென்று நம்பி, (அதனால் ஸ்ரீஉடையவர் திருவடிகளில் அபசாரப்பட்டு, அத்தீவினையின்பயனாக), அணிமிடறு புழுத்தான் தன் - அழகிய கழுத்துப்புழுத்தவனாகிய க்ரிமிகண்டசோழனது, அவையில் - சபையிலே, மேவி - தாம் எழுந்தருளி, "சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு' என்று -, தீட்டும் - எழுதின, திரு கூர வேதியர் கோன் - திருக்கூரமென்னும் ஊரிற் பிறந்த பிராமணசிரேஷ்டரான கூரத்தாழ்வானது, செவ்வி - சிறப்புக்களை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, - பவம் துக்கம் பிணி நீங்க - இப்பிறவியில்நேரக்கூடிய துன்பமும் நோயும் நீங்கவும், நரகம் தூர-நரகக்குழிகள் தூர்ந்துபோகவும், பரமபதம் குடி மலிய - பரமபதத்தில் குடிகள் நிறையவும், பள்ளிகொள்ளும் - சயனத்திருக்கோலமாகச் சேவைசாதிக்கின்ற, நவம் துப்பு செங் கனி வாய் - புதிய பவழத்தையும் செந்நிறமுள்ள கொவ்வைக்கனிபோன்ற வாயையும், கரிய மேனி - கார்நிறமுள்ள திருமேனி நிறத்தையுமுடைய, நம்பெருமாள் -! அரங்கேசர் -! ஊசல் ஆடிர் -; (எ - று.)

ஒருசோழன் கள்ளப்பொய்ந்நூலாகிய சைவாகமத்தை மெய்யென்றுநம்பி, சிவனுக்கு மேற்பட்ட பரம்பொருள்இல்லை என்னும் பொருளுள்ள "சிவாத்பரதரம் நாஸ்தி' என்னும் வாக்கியத்தை எழுதி வித்வான்களிடம் நிர்ப்பந்தித்துக் கையெழுத்துவாங்கிவருகையில், தன்சபைக்குவருவித்த கூரத்தாழ்வானையும் அதனிற்கையெழுத்திடும்படி நிர்ப்பந்திக்க, சிவமென்பதற்கு - குறுணியென்னும் பொருளும் உள்ள தாதலால், அச்சிவத்துக்குமேல் பதக்கு என்பது உண்டு என்னும் பொருளுள்ள "த்ரோணம் அஸ்தி தத: பரம்' என்னும் வாக்கியத்தை எழுதிக் கூரத்தாழ்வான் கையெழுத்திட்டன ரென்க. சோழன் செய்கின்ற உபத்திரவம் தாங்கமாட்டாது ஸ்ரீஉடையவர் அவன் மிடறு புழுத்துச் சாகும்படி அபிசாரம் செய்ததனால், அவன் மிடறுபுழுத்து க்ரிமிகண்டனாயின னென்பது, இங்கு அறியத்தக்கது. "திருக்கூரவேதியர் கோன்செவ்விபாட' என்பதற்கு - கூரத்தாழ்வான் அருளிச்செய்த அழகிய தோத்திரப்பாடல்களைத் ததீயர் பாடாநிற்க என்று பொருள்கூறவும் இடமுண்டு.

(20)