21. | சந்தாடும்பொழிற்பூதூர்முக்கோற்செல்வன் | | றன்மருகனாகியிருதாளுமான | | கந்தாடைக்குலதீபன்முதலியாண்டான் | | கடன்ஞாலந்திருத்தியருள்கருணைபாடக் | | கொந்தாருந்துளவாடச்சிறைவண்டாடக் | | குழலாடவிழியாடக்குழைக்காதாட | | நந்தாடக்கதையாடத்திகிரியாட | | நன்மாடத்திருவரங்கராடிரூசல். | (இ - ள்.) சந்து ஆடும் பொழில் - அழகுநிறைந்த சோலைகளையுடைய, பூதூர் - ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த, முக்கோல் செல்வன்தன் - திரிதண்டத்தை யேந்திய உடையவரது, மருகன் ஆகி - மருமகனாய், இரு தாளும் ஆன - (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய, கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் - கந்தாடைக்குலத்திற்கு விளக்குப்போன்ற முதலியாண்டான், கடல் ஞாலம் திருத்திஅருள் - கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்தி லுள்ளாரை (வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய, கருணை - கிருபாவிசேஷத்தை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, - கொந்து ஆரும் துளவு ஆட - கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய்மாலை அசையவும், சிறை வண்டு ஆட - (அந்தத்திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற) சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும், குழல் ஆட - (அத்திருத்துழாய்மாலையைச்சூடிய) திருக்குழற்கற்றை அசையவும், விழி ஆட - திருக்கண்கள் அசையவும், குழை காது ஆட - குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும், நந்து ஆட - (இடப்பால் மேல்திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும், கதை ஆட - (இடப்பாற்கீழ்க்கரத்திலேந்திய கௌமோததீயென்னுங்) கதாயுதம் அசையவும், திகிரிஆட - (வலப்பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும், நல் மாடம் திருவரங்கர் - அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் -; (எ - று.) எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் - உடன்பிறந்தாள் குமாரன். (21) 22. | திருக்கலியனணுக்கர்திருப்பணிசெய்யன்பர் | | சீரங்கநான்மறையோருள்ளூர்ச்செல்வர் | | தருக்குமிசைப்பிரான்மார்பாரளந்தார்பாதந் | | தாங்குவோர்திருக்கரகந்தரித்துநிற்போ | | ரிருக்குமுதல்விண்ணப்பஞ்செய்வோர்வீரர்க் | | கிறையவர்கள்சீபுண்டரீகர்மற்றும் | | பெருக்கமுள்ளபரிகரங்கடொழுதாட்செய்யப் | | பிரமமாந்திருவரங்கராடிரூசல். | |