பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்891

(இ - ள்.) திருக்கலியனணுக்கர் - திருக்கலியனணுக்கரும், திருப்பணி செய் அன்பர் - திருப்பணிசெய்யன்பரும், சீரங்கநான்மறையோர் - சீரங்கநான்மறையோரும், உள்ளூர்ச் செல்வர் - உள்ளூர்ச்செல்வரும், தருக்கும் இசைப்பிரான்மார் - (இசைபாடுவதிற்) சிறந்தோரான இசைப்பிரான் மாரும், பார் அளந்தார் பாதம் தாங்குவோர் - (திரிவிக்கிரமனாகி) உலகங்களையளந்த நம்பெருமாளது ஸ்ரீபாதந்தாங்குவோரும், திருக்கரகம் தரித்து நிற்போர் - திருக்கரகந் தரித்து நிற்பவரும், இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் - இருக்கு முதலிய வேதவிண்ணப்பஞ் செய்பவர்களும்,வீரர்க்கு இறையவர்கள் - வீரர்க்கிறையவர்களும், சீபுண்டரீகர் - ஸ்ரீபுண்டரீகரும், (ஆகிய பத்துக்கொத்துப் பரிஜநங்களும்), மற்றும் பெருக்கம் உள்ள பரிகரங்கள் - மற்றும் மிகத்தொகுதியான அனைத்துக் கொத்துப் பரிஜநங்களும், தொழுது - வணங்கி, ஆள் செய்ய - (தம்தமது) கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருக்க, பிரமம் ஆம் திருவரங்கர் - பரப்பிரமமாகிய திரு வரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

திருக்கலியனணுக்கர் என்ற கொத்து - குறட்டுமணியகாரர் முதலிய பிரதாந கைங்கரியபரர்கள் அடங்கிய தொகுதி யென்று தோன்றுகின்றது. திருப்பணிசெய் அன்பர் என்ற கொத்து - இப்போது ஆயனார்கொத்துஎன் னும் பெயரோடு நீர்தெளித்தல் முதலிய கைங்கரியங்களைச்செய்யுங் கொத்து என்பர். சீரங்கநான்மறையோர் - அத்யாபகர். உள்ளூர்ச்செல்வர் - ஸ்தலத்தார்- இசைப்பிரான்மார் -அரையர். பாதந்தாங்குவோர் - ஸ்ரீபாதந்தாங்கிகள். திருக்கரகம் தரித்துநிற்போர் - பரிசாரகர்என்னலாம். இருக்குமுதல் விண்ணப்பஞ்செய்வோர் - பட்டர். வீரர்க்குஇறையவர் - வாளும் கையுமாய் எம் பெருமானுக்குத் திருமேனிக்காவல் புரிபவர். ஸ்ரீபுண்டரீகர் - பந்தம்பிடித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுந் தாசநம்பிகள் என்பர். இவர்கள் பத்துக்கொத்தாக ஸ்ரீஉடையவர்காலத்தில் தொகுக்கப்பெற்றார்கள்: அம்முறை காலக்கிரமத்திலே சிற்சில மாறுபாடுகளை யடைந்தது. மற்றும் பெருக்க முள்ள பரிகரங்கள் என்பது - வேத்ரபாணியுத்யோகம் ஸம்ப்ரதியுத்யோகம் அமுதுபடியளந்துகொண்டுவரும் உத்யோகம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும் அடியார்களின் வகைகளைக் குறிக்கும்.

(22)

23.உடுத்திரளோவானவர்கள்சொரிந்தபூவோ
        வுதித்தெழுந்தகலைமதியோவும்பர்மாத
ரெடுத்திடுகர்ப்பூரவாரத்திதானோ
        யாந்தெளியோமின்றுநீடிருக்கண்சாத்திப்
படுத்ததிருப்பாற்கடலுணின்றுபோந்து
        பாமாலைபூமாலைபாடிச்சூடிக்
கொடுத்ததிருக்கோதையுடனாடிரூசல்
        கோயின்மணவாளரேயாடிரூசல்.

(இ - ள்.) (வானத்தில் இப்போது திரள்திரளாகத் தோன்றுபவை), - உடு திரளோ - நட்சத்திரங்களின் கூட்டங்களோ? (அன்றி), வானவர்கள்