(இ - ள்.) உடு மாய - நக்ஷத்திரங்கள் அழிந்தொழியவும், கதிர் உதிர - சூரியசந்திரர்கள் உதிரவும், சண்ட வாயு - பிரசண்டமாருதம், உலகு அலைப்ப - வீசிஉலகங்களை யழிக்கவும், வடவை சுட - வடவாமுகாக்கினி எரித்தழிக்கவும், உததி ஏழும் - கடல்களேழும், கெடும் ஆறு - (இவ்வண்ட மெல்லாம்) அழியும்படி, திரிதரு கால் - பொங்கிப்பரவுங் காலத்தில், உயிர்கள் எல்லாம் - (அவற்றிலுள்ள) ஜீவராசிகளெல்லாவற்றையும், கெடாது - அழியாமல், வயிற்றுள் இருத்தும் - திருவயிற்றில்வைத்துப் பாதுகாக்கின்ற, சீர்த்தி - (தேவரீரது) பெருங்கீர்த்தியை, பாட - (அடியோங்கள்) எடுத்துப்பாடாநிற்க, - நெடு மாயம் பிறவி எல்லாம் - பெரிய மாயையையுடைய எல்லாப் பிறவிகளிலும், பிறந்து -, இறந்து -, நிலத்தோடும் - நிலவுலகத்திலும், விசும்போடும் - வானுலகத்திலும், நிரயத்தோடும் - நரகத்திலும், தடுமாறி திரிவேனை - தடுமாறித்திரிகின்ற என்னை, அருள் செய்து ஆண்ட - கருணைசெய்து ஆட்கொண்ட, தண் அரங்க நாயகனார் - குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடில் -; (எ - று.) அநாதியான புண்யபாபங்களினாலும் பிறந்து இறக்கும்போது இடையிடையே நேர்கிற புண்யபாபங்களினாலும் சுவர்க்க மத்திய பாதாளங்களிற் பலபிறவி பிறந்து இறந்து அலைச்சற்பட்ட தமதுநிலையைப் பின்னிரண்டு அடிகளினால் விளக்கினார். (28) 29. | முருகனுறைகுறிஞ்சித்தென்முல்லைபாய | | முல்லைநிலத்தயிர்பானெய்மருதத்தோட | | மருதநிலக்கொழும்பாகுநெய்தற்றேங்க | | வருபுனற்காவிரிசூழ்ந்தவளத்தைப்பாடக் | | கருமணியேமரகதமேமுத்தேபொன்னே | | கண்மணியேயாருயிரேகனியேதேனே | | யருள்புரிவாயென்றவர்தம்மகத்துள்வைகு | | மணியரங்கமாளிகையாராடிரூசல். | (இ - ள்.) "கரு மணியே - நீலமணிபோன்றவனே! மரகதமே - பச்சை யிரத்தினம்போன்றவனே! முத்தே - முத்துப்போன்றவனே! பொன்னே - பொன்போல் அருமையானவனே! கண்மணியே - கண்ணிற்குள்ளிருக்குங் கருவிழிபோன்றவனே! ஆர் உயிரே - அருமையான உயிர்போன்றவனே! கனியே - இனிய கனிபோன்றவனே! தேனே - தேன்போல் மதுரமானவனே! அருள் புரிவாய் - (எம்மீது) கருணைபுரிவாயாக,' என்றவர் தம் - என்று பிரார்த்தித்தவரது, அகத்துள் - மனத்தில், வைகும் - (அவர்நினைந்த வடிவோடு) தங்கியிருக்கின்ற, அணி அரங்கமாளிகையார் - அழகிய திருவரங்கந்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானே! - முருகன் உறை குறிஞ்சி தேன் - முருகக்கடவுள் வாழ்கின்ற குறிஞ்சிநிலக்கருப்பொருளாகிய தேன், முல்லை பாய - முல்லைநிலத்திற் பாயவும், - முல்லைநிலம் - முல்லை நிலத்துக்கருப்பொருளாகிய, தயிர் பால் நெய் - தயிரும் பாலும் நெய்யும், |