திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனுமான இரணியன் தேவர் முதலிய எல்லோர்க்கும் கொடுமை இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான், இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படியே அவன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்ஙனம்வழிப்படாத அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒரு நாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி 'நீ சொல்லும் நாராயணனென்பான் எங்குஉளன்? காட்டு' என்ன, அப்பிள்ளை, "தூணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்' என்று சொல்ல, உடனே இரணியன் 'இங்கு உளனோ?' என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப் புடைக்க, அதினின்று திருமால் மனிதரூபமும் சிங்கவடிவமுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மடியின்மீது வைத்துக் கொண்டு தனது திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தனன் என்பதாம். உலகமளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:- மகாபலியென்னும் அசுரராஜன் தன்வல்லமையால் இந்திரன்முதலிய யாவரையும் வென்று மூன்றுஉலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்ததேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு காசியபமகாமுனிவனுக்கு அதிதிதேவியினிடந் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியஅனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண் வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, தானமாகப்பெற்ற மற்றோரடி நிலத்திற்கு இடமின்றாகவே அதற்காக அவன்வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியைவைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளந்ததில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே, எல்லாவுலகங்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்குதற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்திரம் வல்லவனென்பது தோன்றும். வெள்ளிநாட்டங் கெடுத்த கதை:- திருமால் வாமனவடிவங்கொண்டு மாவலியினிடஞ் சென்று மூவடிமண் வேண்டியபோது அவ்வசுரன் அங்ஙனமே கொடுக்கிறே னென்று வாக்குதத்தஞ்செய்கையில் அருகுநின்ற அசுரகுருவாகிய சுக்கிராசாரியன் "உன்னை வஞ்சனையால் அழிக்கும்பொருட்டுத் |