குலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம். அகலிகையின் சாபவிமோசன வரலாறு:- கௌதமமுனிவனது பத்தினியான அகலிகையினிடத்திற் பலநாளாய்க் காதல்கொண்டிருந்த, தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் அம்முனிவனாச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவதுபோலக்கூவ, அதுகேட்ட கௌதமமுனிவன் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்டதென்று கருதியெழுந்து காலைக்கடன் கழித்தற்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இந்திரன் இதுவே சமயமென்று அம்முனிவருருக்கொண்டு ஆச்சிரமத்துட்சென்று அவளிடஞ் சேர்கையில் "தன்கணவனல்லன், இந்திரன்' என்று உணர்ந்தும் அகலிகைவிலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை ஞானக்கண்ணினால் அறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவன் அவளைக் கருங்கல் வடிவமாம்படி சபித்து, உடனே அவள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டியதற்கு இரங்கி, "ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கி நிஜவடிவம் பெறுக' என்று அநுக்கிரகிக்க, அவ்வாறே கல்லுருவமாய்க் கிடந்த அகலிகை ஸ்ரீராமலக்ஷ்மணர் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டமாத்திரத்திலே கல்வடிவம் நீங்கி இயற்கைநல்வடிவம் அடைந்தன ளென்பதாம். தசரதராமன் பரசுராமனை வென்ற வரலாறு:- விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனதுகுலத்துப் பூர்விகராசனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்தமகளான சீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாமித்திர முனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற்சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சீதையை இராமனுக்கு மணஞ்செய்து வைத்தனன். சீதாகல்யாணத்தின்பின்பு தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை யெதிர்த்து 'முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தையறிந்தேன்; அதுபற்றிச் செருக்கடையவேண்டா; வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்' என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற் கொணர்ந்த வில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து 'இந்தப் பாணத்திற்கு இலக்கு யாது?' என்றுவினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க, அவன் க்ஷத்திரிய வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக்கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதாம். |