பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்557

 

தலவிசேடம் :- திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திறுதியில் உரைத்தவை பார்க்க.

1594.

திருக்கச்சி யேகம்பம் பணிந்தேத்தித் திங்களார்
நெருக்கச்செஞ் சடைக்கணிந்தரர் நீடுபடு தொழநினைவார்
வருக்கைச்செஞ் சுளைபொழிதேன்வயல்விளைக்கு நாட்டிடைப் போய்ப்
பருக்கைத்திண் களிற்றுரியார் கழுக்குன்றின் பாங்கணைந்தார்.

329

(இ-ள்.) திருக்கச்சி....ஏத்தி - திருக்கச்சியினையும் திருவேகம்பத்தினையும் இறைஞ்சித் துதித்து; திங்களார்......நினைவார் - பிறைச்சந்திரனைத் தமது செறிந்த செஞ்சடைக் கற்றையில் அணிந்த இறைவர் நீடி எழுந்தருளிய பிற தலங்களைச் சென்று தொழுவதற்கு நினைந்தவராகி; வருக்கை..போய் - பலாப்பழங்களின் செவ்விய சுளைகள் பொழிந்த தேன் பெருகி வயற்பயிரை விளையச்செய்யும் அத்திருநாட்டினிற் சென்று; பருக்கை...பாங்கணைந்தார் - பருத்த கையினையுடைய வலிய யானையின் உரிவையை யுடையவரது திருக்கழுக்குன்றின் பக்கத்தில் அணைந்தனர்.

(வி-ரை.) திருகச்சி ஏகம்பம் - கச்சியினின்றும் புறப்படுகின்ற நாயனார் திருக்கோயிலினையும் திருநகரத்தினையும் வணங்கி மேற்சென்றனர் என்க. ஆளுடைய பிள்ளையார் புராணம் - 518, 1028 பார்க்க. "என் எண்ணத்தான்" என்று காஞ்சியினை நினைந்துகொண்டு பிறபதிகளினின்றும் மீண்டருளிய நாயனார், அவ்வாறே திருஏகம்பத்தை இறைஞ்சிச் செல்வார், "ஏகம்பன் என் எண்ணத்தான்" என்று நினைந்து ஏத்தி மேற்செல்வாராயினர் என்பது. ஆளுடையபிள்ளையார் திருக்காளத்தியினின்றும் புறப்படுவார் அத்திருமலையைத் தொழுது "எந்தையா ரிணையடி என்மனத்துள்ளவே" என்று ஏத்திச்சென்றது இங்கு நினைவு கூர்தற்பாலது. இரண்டு பதிகங்கள் காண்பது மிக்கருத்துப் போலும்.

திங்களார் - ஆர்விகுதி பெருமை குறித்த பன்மை விகுதி. ஆர் - ஆத்தி (மலர்) என்று கொண்டு, ஆர் நெருக்க - ஆத்தியினை அணுக; திங்கள் சடைக்கணிந்தார் - பிறையைச் சடையில் அணிந்தவர் என்று கூட்டி உரைத்தலுமாம். ஆத்தியின் சிறப்பு "ஆத்திசூடி யமர்ந்த தேவன்" என்று ஒளவையார் தொடங்கி ஏத்தியதனாலுமறிக. சடைக்கு - சடையில்; நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்த உருபு மயக்கம்.

நீடுபதி - நீடியெழுந்தருளிய பல பதிகள். பதி - சாதியொருமை. நினைவார் - அணைந்தார் - என்க. நினைவார் - எதிர்கால முற்றெச்சம்.

வருக்கை - பலாவின் வகை. தேன் - பலாப்பழச் சுளைகளின் வரும் சாறு, வயல் விளைக்கும் - பெருக்கினால் வயல் விளைதற்குக் காரணமாகும். வருக்கை, வேரினின்றும் கனிகள் வெடித்து மேல் மண்ணை நனைத்து ஈரம்செய்தல் காணத்தக்கது. இதனால் நாட்டு வளமும் கூறியபடி.

பருக்கைக் களிறு - திண்களிறு என்று தனித்தனி கூட்டுக. பருங்கை என்பது பருக்கை என நின்றது. "பருக்கையானை" (தேவா); "பனைக்கை மும்முதவேழம்" (தேவா - குறுந்) என்றவை காண்க.

உரியார் - உரி - தோல். உரிக்கப்படுதலால் உரி எனப்பட்டது. "உடுக்கை" என்பதுபோல. உரியார் - உரியினை அணிந்தவர்.

பாங்கு - அணிமை. பக்கம்.

329

1595.

நீடுதிருக் கழுக்குன்றி னிருத்தனார் கழல்வணங்கிப்
பாடுதமிழ்த் தொடைபுனைந்து பாங்குபல பதிகளிலுஞ்