பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி917

 

நம்மைப் பேணு மம்மைகாண்" (1774) என்று இறைவர் கூறியதற்கும், அம்மையே" என்று அழைத்ததற்கும் உரிய தன்மை காட்டும் அகச்சான்று. "பணியணிவார்" (1719) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

13

தானே தனிநெஞ்சந் தன்னை யுயக்கொள்வான்
தானே பெருஞ்சேமஞ் செய்யுமாற் - றானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழு
நீணாகத் தானை நினைந்து.

14

தன்னை உய்யக்கொள்ளும் பொருட்டு நாகத்தானை நினைந்து தானே பெரும் சேமம் செய்யும்; அதுதானே (எனது) தனி நெஞ்சம்.

பெருஞ் சேமஞ் செய்தல் - பெரிய காவலைச் செய்துகொள்ளுதல். ஆகம் - உடம்பு. ஆகத்தால் பூண் ஆகப் பொலிந்து - நஞ்சுமிழும் நீண் நாகத்தான் என்க. நஞ்சு உமிழுமாயினும் ஆகத்தால் பூணாகப் பொலியும் நாகம் என்றபடி. தானே சொற்பொருட்பின் வருநிலை. தனக்குப் பெருங்காவலைத் தானே நினைந்து செய்து கொண்டதனால் தனி நெஞ்சமென்றார். கொள்வான் - கொள்ளும்படி.

14

நினைந்திருந்து வானவர்க ணீண்மலராற் பாதம்
புனைந்து மடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய்! வேதியனே! யென்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ வினி.

15

வானவர்கள் நினைந்து இருந்தும் பாதங்களில் மலர்புனைந்தும் திருவடி சேரமாட்டாது அலைகின்றனர்; ஆதலின் அவ்வாறே நினைந்தும் துதித்தும் நிற்கும் எனக்குச் சிவன் இனி என்செய்வானோ? அறியேன்.

தவத்திற் சிறந்த வானவர்கள் தாமும் அடிசேரமாட்டாது அலைகுவாராயின், நான் எதனைப் பெற உள்ளவள்? என்செய்வான் என்பதற்கு அவன் என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது. மின்செய்வான் செஞ்சடை - மின்போன்ற பெரிய சிவந்த சடை. செய் - உவம உருபு.

இனியோ நாமுய்ந்தோ; மிறைவன்றாள் சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோ நெஞ்சே! - யினியோர்
வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோங் காண்.

16

நெஞ்சே! நாம் இறைவன் தாள் சேர்ந்தோம்; ஆதலின் அவருக்கு இனியராயினோம்; இனி ஓர் இடருமில்லோம்; பிறவிக்கடலை நீந்தினோம்; இனி இதனை ஓர்வாயாகிக் (நினைவராயாகிக்) காண்க.

இனியோம் - இனியாராயினோம். பிற அடியாரையும் உளப்படுத்திய உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. ஓர் இடரும் இல்லோம் - முற்றும்மை தொக்கது. கடல் - உட்புகுந்தாரை ஆழ்ந்து அமிழ்த்திவிடும் தன்மை குறித்த உருவகம். கனைகடல் எனற்பாலது எதுகை இசையின்ப நோக்கி வல்லொற்று மிக்கது. நெஞ்சே! நாம் இனியோம்; உய்ந்தோம்; சேர்ந்தோம்; நீந்தினோம்; இனி - ஓர் - வண் - என்று கூட்டுக. "இனி என்செய்வான்?" என்று முன்பாட்டிற் கேட்ட வினாவுக்கு விடை கூறுவார்போலக் கூறியது; அடி பொருந்தமாட்டாது அலையும் வானவர்போலன்றி நாம் பிறவிக்கடல் நீந்தினோம் என்று தாம்பெற்ற பேற்றினை வியந்து கூறியது. இறைவனருள் - என்பதும் பாடம்.

16