பக்கம் எண் :


918திருத்தொண்டர் புராணம்

 

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற வரன்.

17

குருவையே சிவமாகக் காண்பார்க்கும், இலிங்கத்தைக் கைதொழுது சிவமாகக் காண்பார்க்கும் அவனை அங்கங்கும் காணல் ஆகும்; பத்தரது திருவேடத்தைக் காதலாற் சிவனெனவே காண்பார்க்குச் சிந்தையுள்ளே சோதியாய்த் தோன்றும்; உலகுக்கு முதற் கடவுளாய் நின்ற அரன்.

அரன் - தன்மையன்; (அவனைக்) காணலாம்; தோன்றும் என்க. காண்பார்க்கு என்ற மூன்றினையும் முறையே குரு, இலிங்கம், சங்கமம் என்ற மூன்றிடத்தும் சிவனைக் காண்பவர்க்கு என்று பொருள் கொள்க. உலகுக்கு ஆதியாய் நிற்றல் - உலகம் தன்னிடத்தில் ஒடுங்கி மீள உளதாக நிற்றல். அரன் - சங்காரகாரணனாய் நின்ற முதற்கடவுள். சிவஞானபோதம் 12ஆம் சூத்திரத்தும், முதற் சூத்திரத்துங் கூறும் பொருள்கள் காண்க. தான் தானாக செய்த குருவைச் சிவமாகக் காண்பது என்பார் அடைமொழியின்றிக் காண்பார்க்கு என்றும். புறத்தில் சிவலிங்கத் திருமேனியிற் காண்பவர் என்பார் கைதொழுது என்றும், திருவேடத்திற் காண்பார் ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்டு வழிபட்டும் அத்திருவேடத்திற் கண்ட திருநீறு கண்டிகை யிவற்றால் வசீகரிக்கப்பட்டும் நிற்பாராதலின் காதலாற் காண்பார் என்றும் கூறினார். ஆதியாய் - புனருற்பவத்துக்குக் காரணராய். நின்ற - சர்வசங்கார காலத்தில் தான் அழியாது எஞ்சிநின்ற. இனி, இவ்வாறன்றிக் கைதொழுது காண்பார் என்றது புறப்பூசையினையும், காதலாற் காண்பார் என்றது அகப்பூசனையினையும் குறிப்பன எனவும், காண்பார்க்கும் காணலாம் என்றது இவ்விரு நிலையும் இன்றித் தத்தம் இயல்பாற் சமய கோடி களிற் காண்பார் அவ்வவர் தகுதிக்கேற்பக் காண்பார் என்றும், உரைப்பதுமாம். இப்பொருளில், அன்பு நிலையில்லார் என்பார் அடையின்றிக் கூறினார் என்க. இவ்வாறன்றி வேறு பொருள் கொண்டனர் முன் உரைகாரர்.

17

அரனென்கோ? நான்முக னென்கோ? வரிய
பரனென்கோ? பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை யெம்மானை யின்று.

18

உருத்திரனென்பேனோ? பிரமதேவன் என்பேனோ? அப்பிரமனுக்கு அப்பாற்பட் விட்டுணு என்பேனோ? எம்மானை இன்னபண்புடையவன் என்று உணரமாட்டேன்.

அரன் - அழித்தல் செய்யும் காலருத்திரன்; அரிய பரன் - பரன் - அப்பாற்பட்டவன்; அரிய - அந்நான்முகனுக்கு அரிய; மூவருமாகி, மூவருக்குள்ளும் நிறைந்து, அவ்வவர் தொழில்களைச் செய்வித்தும் அதற்கப்பாற்பட்டும் அறியமுடியாது நிற்பவர் சிவபெருமான் என்பது கருத்து. முரண் - கயிலைமலையைப் பேர்த்து விடுவேன் என்று அசைவித்த மாறுபாடு. தானவன் - இராவணன்.

18

இன்று நமக்கெளிதே மாலுக்கு நான்முகற்கும்
அன்று மளப்பரிய னானானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவரனைக் காணு மறிவு.

19