பக்கம் எண் :

இயல் ஐந்து  
  
 பேதை

60.

விழித்திருப்பவனுக்கு இரவு நெடிதாகும்; களைத்திருப்பவனுக்கு வழி நெடுந்தூரமாகும்; நல்லறத்தை அறியாத மூடருக்கு (ஜனன-மரணமாகிய) ஸம்ஸாரத்தொடர் எல்லையற்றதாகும்.

(1)
 
  
61.

(ஸம்ஸார) யாத்திரையில், ஒருவன், தனக்குநிகரான அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்காவிட்டால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக;மூடனுடைய துணை உதவியாகாது.

(2)
 
  
62.

'என் பிள்ளைகள், என் செல்வம்' என்ற சிந்தனையால் மூடன் துயரப்படுகிறான். அவனே அவனுக்குச் சொந்தமில்லை! பிள்ளைகளும் தனமும் எப்படிச்சொந்தமாகும்?

(3)
 
  
63.

பேதை தன் மடமையை உணர்ந்தால், அந்த அளவுக்கு அவன் அறிவுள்ளவன்; தன்னைப் பண்டிதனாக எண்ணிக்கொள்ளும் பேதை முழுமூடனே யாவான்.

(4)
 
  
64.

அகப்பை குழம்பின் சுவையை அறியாது; அது போல் வாழ்நாள் முழுவதும் பேதை ஞானியோடுபழகி வந்தாலும், தருமத்தை அவன் அறிவதில்லை.

(5)
 
  
65.

நாக்கு குழம்பின் சுவை அறிகிறது; அதுபோல்கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியோடு பழகினாலும், அவன் தருமத்தின் இயல்பைத் தெரிந்து கொள்கிறான்.

(6)